தேனியில் சார்பதிவக எல்லைகள் சீரமைப்பு குறித்த கருத்துக்கேட்பு கூட்டம்


தேனியில்  சார்பதிவக எல்லைகள் சீரமைப்பு குறித்த கருத்துக்கேட்பு கூட்டம்
x

தேனியில் சார்பதிவக எல்லைகள் சீரமைப்பு குறித்த கருத்துக்கேட்பு கூட்டம் வருகிற 30-ந்தேதி நடைபெறுகிறது

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சில சார்பதிவக எல்லைகளில் ஒரு முக்கிய வருவாய் கிராமமானது ஒரு சார்பதிவாளர் அலுவலகத்திலும், அதே வருவாய் கிராமத்துக்கு உட்பட்ட குக்கிராமம் வேறு சார்பதிவாளர் அலுவலகத்திலும் அமைந்துள்ளது. இதனால், தானியங்கி பட்டா மாற்றம் போன்ற பதிவுத்துறை, வருவாய்த்துறை ஒருங்கிணைந்த செயல்பாடுகளுக்கு இடையூறுகள் உள்ளன. இதை களையும் நோக்கத்தோடு ஒரு வருவாய் கிராமம் முழுவதையும் ஒரே சார்பதிவக எல்லைக்குள் கொண்டு வரும் வகையிலும், கிராமங்கள் அனைத்தும் அருகில் உள்ள சார்பதிவக எல்லைக்குள் வரும் வகையிலும் சார்பதிவக எல்லைகள் சீரமைக்கப்படும் என்றும் தமிழக சட்டப்பேரவையில் 2021-2022 நிதி ஆண்டிற்கான வணிகவரி மற்றும் பதிவுத்துறை மானியக்கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டது.

அதன்படி தேனி மாவட்டத்துக்கு உட்பட்ட பெரியகுளம் பதிவு மாவட்டத்தில், குறிப்பிட்ட வருவாய் கிராமத்துடன் உத்தேசமாக இணைக்கப்பட வேண்டிய வருவாய் கிராம பட்டியல் துணைப் பதிவுத்துறைத் தலைவர் அலுவலகம், மாவட்டப் பதிவாளர் அலுவலகம் மற்றும் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களில் அறிவிப்பு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, சார்பதிவக கிராம எல்லை மறுசீரமைப்பு தொடர்பாக பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம் தேனி சிவராம் நகரில் உள்ள திருமண மண்டபத்தில் வருகிற 30-ந்தேதி மாலை 4 மணியளவில் கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடக்கிறது. இதில், தொடர்புடைய கிராம மக்கள் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story