பட்டுக்கோட்டையில் இருந்து திருச்செந்தூருக்கு நேரடி பஸ் விட வேண்டும்
பட்டுக்கோட்டையில் இருந்து திருச்செந்தூருக்கு நேரடி பஸ் விட வேண்டும்
பட்டுக்கோட்டையில் இருந்து திருச்செந்தூருக்கு நேரடி பஸ் விட வேண்டும் என்று அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பயணம் செய்ய முடியாத நிலை
பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, திருப்பதி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பட்டுக்கோட்டை பகுதியில் இருந்து தினசரி 100-க்கும் மேற்பட்ட பயணிகள், பக்தர்கள் திருச்செந்தூருக்கு செல்கின்றனர். பட்டுக்கோட்டையில் இருந்து திருச்செந்தூருக்கு நேரடி பஸ் வசதி இல்லை.
சிதம்பரம், நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி பகுதியில் இருந்து வரும் பஸ்கள் பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் சிறிது நேரம் நின்று பயணிகளை ஏற்றிச்செல்கின்றன. அவ்வாறு வரும் பஸ்கள் பெரும்பாலும் முழுவதுமாக பயணிகளை ஏற்றி வருவதால், குடும்பமாக திருச்செந்தூர் செல்லும் பக்தர்கள், பயணிகள் பஸ்சில் ஏறிப்பயணம் செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும் பல நேரங்களில் பஸ்சில் அதிக பயணிகள் இருந்தால், பட்டுக்கோட்டை பஸ் நிலையத்திற்கு வராமல், தம்பிக்கோட்டை புறவழிச்சாலை வழியாகவே, கிழக்கு கடற்கரைச்சாலையில் திருச்செந்தூர் நோக்கி பஸ்கள் சென்று விடுகின்றன.
நேரடி பஸ் வசதி வேண்டும்
இதனால் பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் இரவு நேரங்களில் நீண்ட நேரம் பயணிகள் காத்திருந்து ஏமாற்றமடைந்து பயணத்தை ரத்து செய்து வீடு திரும்பும் நிலை உள்ளது. இதேபோல் பகல் நேரங்களிலும் பஸ்களில் அதிக பயணிகள் இருந்தால் பட்டுக்கோட்டை வருவதில்லை. எனவே பட்டுக்கோட்டை பகுதி பயணிகள், பக்தர்கள் பயன்பெறும் வகையில் பட்டுக்கோட்டை பஸ் நிலையத்திலிருந்து திருச்செந்தூருக்கு நேரடியாக பஸ் வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.