தமிழகத்தை சேர்ந்தவர்கள் யாரும் உயிரிழந்ததாக தகவல் இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியம்


தமிழகத்தை சேர்ந்தவர்கள் யாரும் உயிரிழந்ததாக தகவல் இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியம்
x
தினத்தந்தி 3 Jun 2023 11:54 PM GMT (Updated: 4 Jun 2023 12:38 AM GMT)

ஒடிசாவின் பத்ராக் - சென்ட்ரல் இடையே இயக்கப்பட்ட சிறப்பு ரெயிலில் தமிழக பயணிகள் 137 பேர் அழைத்து வரப்பட்டனர்.

சென்னை,

கொல்கத்தாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசா அருகே தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானது. இந்த கோர விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்திருப்பதோடு, பலரும் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், தெற்கு ரெயில்வே சார்பில் சென்னை சென்டிரல், காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த மையங்கள் மூலம் ரெயிலில் பயணம் செய்தவர்களின் விவரங்கள் அவர்களின் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஒடிசாவில் இருந்து சிறப்பு ரெயில் அதிகாலை 4.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில்நிலையத்தில் நடைமேடை 11-ஐ வந்தடைந்தது.

சிறப்பு ரெயிலில் வந்த பயணிகளை அமைச்சர்கள் மா.சுப்ரமணியம் மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் குழுவினர் அவர்களை வரவேற்றனர். பின்னர் சிறப்பு ரெயிலில் வந்த பயணிகளிடம் நலம் விசாரித்தனர். ஒடிசாவின் பத்ராக் - சென்ட்ரல் இடையே இயக்கப்பட்ட சிறப்பு ரெயிலில் தமிழக பயணிகள் 137 பேர் அழைத்து வரப்பட்டனர். பின்னர் மீட்கப்பட்டவர்கள் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியம், "ஒடிசாவுக்கு தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க 6 மருத்துவமனையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் வந்தவர்களில் 8 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்து 8 பேர் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

யாருக்கும் தீவிர சிகிச்ச்சைகான பெரிய பாதிப்புகள் இல்லை. 305 மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ளனர். 205 படுக்கைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தை சேர்ந்தவர்கள் யாரும் உயிரிழந்ததாக தகவல் இல்லை" என்று அவர் கூறினார்.


Next Story