அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனங்கள் பிற டெண்டரில் பங்கெடுக்கக்கூடாது என்று விதி எதுவும் இல்லை - உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி


அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனங்கள் பிற டெண்டரில் பங்கெடுக்கக்கூடாது என்று விதி எதுவும் இல்லை - உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி
x

பொங்கல் பரிசுத் தொகுப்பில் இருந்த குறைபாடுகளுக்காக அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு பிற பொருள்கள் வழங்கும் டெண்டரில் பங்கெடுக்கக்கூடாது என்று விதி எதுவும் இல்லை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.

தவறான அறிக்கை

இதுகுறித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கணிதம் படித்தும் கணக்குத் தெரியாத ஒருவரும் சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்று கைதான ஒருவரும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல் தொடர்பாக அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு பருப்பு மற்றும் பாமாயில் வினியோகிக்க அனுமதி வழங்கப்பட்டதாக விவரம் அறியாமல் குறை கூறியுள்ளனர்.சிறு தவறையும் பொறுத்துக் கொள்ளாத, சொந்தக் கட்சிக்காரர்களே தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கத் தயங்காத முதல்-அமைச்சர், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆணையிட்டதோடு, அவரே பல பொதுவினியோகத் திட்ட அங்காடிகளுக்கும் சென்று பார்வையிட்டார்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருள்கள் தொடர்பாக சரியாகச் சோதனை செய்யாமல் அனுப்பியதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தரக்கட்டுப்பாட்டு முதுநிலை மேலாளர், தரக்கட்டுப்பாட்டு ஆய்வாளர் மற்றும் கிடங்கு பொறுப்பாளர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதோடு, தரமற்ற பொருள்களை வழங்கி அவற்றை மாற்றிக் கொடுத்திருந்தாலும் அவற்றிற்காகவும் தாமதமாக பொருள்கள் வழங்கியதற்காகவும் இதர காரணங்களுக்காகவும் விதிகளின்படி மொத்தம் 5 நிறுவனங்களுக்கு ரூ.7.04 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

விதி இல்லை

இத்தகைய அபராத விதிப்பு என்பது இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய தண்டனை என்று வினியோகிப்பாளர்களே முறையிட்டார்கள். பொருள்கள் வினியோகிக்க ஒப்பந்தப் புள்ளியில் விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகளை நிறைவு செய்யாத நிறுவனங்கள் மீது எந்தெந்த வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அந்தந்த வகைகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனங்கள் பிற பொருள்கள் வழங்கும் ஒப்பந்தப் புள்ளியிலேயே பங்கெடுத்துக் கொள்ளக்கூடாது என்று எந்த விதியும் இல்லை. இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டியதற்காக அபராதம் விதிக்கப்பட்ட ஒருவர் 4 சக்கர வாகனம் ஓட்டக்கூடாது என்று சொல்வதுபோல், தி.மு.க. ஆட்சி மீது குற்றம் சொல்ல ஏதாவது காரணம் கிடைக்காதா? என்று ஏங்கித் தவிப்பவர்கள் சிலர் பேனைப் பெருமாள் ஆக்க முயல்கின்றனர்.பல சாதனைகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் அரசு மீது வீண்பழி சுமத்துவதை விட்டு விட்டு ஆக்கப்பூர்வமாகச் செயல்பட கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story