"பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்ததில் அரசியல் எதுவும் கிடையாது" - நடிகர் விஷால் விளக்கம்


பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்ததில் அரசியல் எதுவும் கிடையாது - நடிகர் விஷால் விளக்கம்
x

காசி நகரைப் பார்த்த போது ஒரு சாதாரண குடிமகனாக தன் மனதில் தோன்றியதை பிரதமரிடம் தெரிவித்ததாக நடிகர் விஷால் கூறினார்.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னனி ஹீரோக்களில் ஒருவரான நடிகர் விஷால், சென்னை மாத்தூரில் இன்று 11 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்தார். அத்துடன் 51 வகையான பொருட்கள் அடங்கிய சீர்வரிசையை மணமக்களுக்கு வழங்கினார்.

திருமணத்தின் போது 3 மத முறையிலும் வழிபட்டு, மணமக்களுக்கு நடிகர் விஷால் தாலி எடுத்து கொடுத்தார். அதன்பின்னர் 11 திருமண தம்பதிகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய நடிகர் விஷால், நடிகர் சங்க கட்டடம் கட்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

இதனிடையே அண்மையில் காசிக்கு சென்று வந்த நடிகர் விஷால், 'காசியை புதுப்பித்து சிறப்பாக மாற்றியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி' என டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதற்கு பிரதமர் மோடி 'காசியில் உங்களுக்கு அற்புதமான அனுபவம் கிடைத்ததில் மகிழ்ச்சி' என பதிலளித்திருந்தார்.

இது குறித்து விஷாலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த விஷால், "பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்ததில் அரசியல் எதுவும் கிடையாது" என்று கூறினார். மேலும் தாஜ்மகாலைப் பார்க்கும் போது ஷாஜகானை நினைத்து நாம் வியப்பது போல், காசி நகரைப் பார்த்த போது பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என தோன்றியதாகவும், அதன் காரணமாகவே ஒரு சாதாரண குடிமகனாக தன் மனதில் தோன்றியதை பிரதமரிடம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.


Next Story