வாகனங்களின் சாவியை பணியாளர்கள் ஒப்படைக்க வந்ததால் பரபரப்பு


வாகனங்களின் சாவியை பணியாளர்கள் ஒப்படைக்க வந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 3 Oct 2023 6:45 PM GMT (Updated: 3 Oct 2023 6:45 PM GMT)

நாகை கலெக்டர் அலுவலகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட வாகனங்களின் சாவியை பணியாளர் ஒப்படைக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகப்பட்டினம்

வாகனங்களின் சாவியுடன் வந்தனர்

நாகை கலெக்டர் அலுவலகத்திற்கு கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர், கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட வாகனங்களின் சாவிகளை ஒப்படைக்க வந்தனர். அப்போது அங்கு கலெக்டர் இல்லாததால் மாவட்ட வருவாய் அலுவலர் பேபியை சந்தித்து அவர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் பல்நோக்கு சேவை மையம் மற்றும் விவசாய உள்கட்டமைப்பு நிதிதிட்டத்தை லாபகரமாக இயங்கும் இடத்தில் மட்டும் அமல்படுத்த வேண்டும். ஆனால் அதற்கு மாறாக மாவட்டத்தில் அனைத்து சங்கங்களிலும் லாபம், நஷ்டம் பாராமல் விவசாய உபகரணங்கள் மற்றும் லாரி, டிராக்டர் போன்ற வாகனங்கள் வாங்குதல் உள்ளிட்ட ஏதாவது ஒரு பணியை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என கடும் நெருக்கடி கொடுக்கப்படுகிறது.

நஷ்டம்

இதனால் சங்கங்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க கூடிய நிலை ஏற்படும் என்பதால், பல்நோக்கு சேவை மையம், விவசாய உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் பொருட்களை வாங்க வலியுறுத்துவதை கைவிட வேண்டும். மாநில அளவில் இதில் உள்ள பிரச்சினைகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 25-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் கூட்டுறவுத் துறை செயலாளர்கள் அனைவரும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். கூட்டுறவு வங்கிகள் மூலம் கொள்முதல் செய்துள்ள அனைத்து வாகனங்களின் சாவியை மாவட்ட இணைப்பதிவாளர் அலுவலகத்தில் ஒப்படைப்பதற்காக வந்துள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பரபரப்பு

அப்போது கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க நாகை மாவட்டத்தலைவர் கலியபெருமாள், செயலாளர் அமிர்தம், பொருளாளர் சேதுராமன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையென்றால் தொடர் விடுப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் தெரிவித்தனர்.

நாகை கலெக்டர் அலுவலகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட அனைத்து வாகனங்களின் சாவியை பணியாளர்கள் ஒப்படைக்க வந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story