விபத்தில் வாலிபர் பலி: தகவல் தெரிவிக்காத போலீசாரை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்


விபத்தில் வாலிபர் பலி: தகவல் தெரிவிக்காத போலீசாரை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்
x

ஆரணி அருகே விபத்தில் வாலிபர் உயிரிழந்தது குறித்து சுமார் 300-க்கும் மேற்பட்டோர் ஆரணி-சென்னை சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வெள்ளேரி கிராமத்தில் வசிக்கும் விவசாயி பாபு என்பவரின் மகன் தரணிக்குமார்(வயது 31). இவருக்கு சுகன்யா என்ற மனைவியும் லக்ஷன் (வயது 2), தர்ஷன் என்ற 6 மாத கைக்குழந்தையும் உள்ளனர். இவர் ஸ்ரீபெரும்புத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார்.

இந்நிலையில் கடந்த 3-ம் தேதி அன்று அதிகாலை வேலை முடித்த பின் சென்னையிலிருந்து ஆரணி நோக்கி வந்த அரசு பேருந்தில் வந்துள்ளார். பின் தன்னுடைய கிராமத்திற்கு சென்னை ஆரணி சாலையில் ஓரமாக நடந்து வந்துள்ளார்.

அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தரணிக்குமார் பலத்தகாயம் அடைந்து ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். இதில் கடந்த 3 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த தரணிக்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரழந்தார்.

இந்நிலையில் கடந்த 3-ந் தேதி தரணிக்குமார் விபத்தில் சிக்கியது குறித்து உறவினர்களிடம் தகவல் தெரிவிக்காமல் காலம் தாழ்த்திய போலீசாரை கண்டித்து சுமார் 300க்கும் மேற்பட்டோர் ஆரணி-சென்னை சாலையில் திடிரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆரணி டி.எஸ்.பி ரவிசந்திரன் தலைமையில் போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இந்த மறியல் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றாதால் சென்னை ஆரணி சாலையில் முற்றிலும் ஸ்தம்பித்தது வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story