ஆட்டோவை திருடி, ஆடு கடத்திய கொள்ளையன்... ரோந்து போலீசாரை கண்டதும் தப்பி ஓட்டம்
ஆவடி அருகே ஆட்டோவை திருடி, ஆட்டை கடத்திச்சென்ற கொள்ளையன் ரோந்து போலீசாைர கண்டதும் தப்பி ஓடிவிட்டான்.
ஆவடியை அடுத்த கோவில்பதாகை அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தினர்.
போலீசாரை கண்டதும் ஆட்டோவை நிறுத்திவிட்டு, அதனை ஓட்டி வந்தவர் தப்பி ஓடிவிட்டார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் ஆட்டோவில் பார்த்தபோது ஆடு ஒன்று இருந்தது. போலீசார் ஆடு மற்றும் ஆட்டோவை போலீஸ் நிலையம் கொண்டு சென்று, தப்பி ஓடிய மர்மநபர் குறித்து விசாரணை செய்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று மாலை ஆவடியை அடுத்த அரக்கம்பாக்கத்தை சேர்ந்த கீதா (வயது 42) என்பவர் அதே பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்த தனது ஆட்டை காணவில்லை என ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதேபோல் ஆவடி ஐ.ஏ.எப். சாலை கோடுவல்லி பகுதியை சேர்ந்த ரவி (30) என்பவர் வீட்டருகே நிறுத்தியிருந்த தனது ஆட்டோவை காணவில்லை எனவும் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் நள்ளிரவில் ரோந்து போலீசார் பறிமுதல் செய்த ஆடு கீதாவுக்கு சொந்தமானதும், ஆட்டோ ரவிக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது. கொள்ளையன் ரவியின் ஆட்டோைவ திருடி, அதில் கீதாவின் ஆட்டை திருடி கடத்திச்சென்றதும், ரோந்து போலீசாரை கண்டதும் திருடிய ஆட்டோ மற்றும் ஆட்டை விட்டுவிட்டு தப்பி ஓடியதும் தெரியவந்தது. இதுபற்றி ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கொள்ளையனை தேடி வருகின்றனர்.