குடிநீர் கேட்டு திருவாடானை யூனியன் அலுவலகம் முற்றுகை

குடிநீர் கேட்டு திருவாடானை யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்
தொண்டி,
திருவாடானை யூனியன் மாவூர் ஊராட்சி கங்கானரேந்தல், மங்களம், மாவூர், மருதங்குடி கிராமங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு கடந்த 3 மாத காலமாக காவிரி கூட்டு குடிநீர் மற்றும் திணைக்கத்தான் வயல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை திருவாடானை யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாவூர் ஊராட்சி கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறோம். எனவே இந்த கிராமங்களுக்கு உடனடியாக குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அதை தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் மலைராஜன், சந்திரமோகன், ஆகியோர் குடிநீர் வாரிய அதிகாரிகளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கிராமங்களுக்கு உடனடியாக குடிநீர் விநியோகம் செய்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.






