திருவாடானை யூனியன் அலுவலகம் முற்றுகை
குடிநீர் வசதி கோரி திருவாடானை யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
தொண்டி,
திருவாடானை தாலுகாவில் உள்ள ஆதியூர் 4-வது வார்டு பகுதியைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஏராளமானோர் நேற்று மாலை திருவாடானை யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
ஆதியூர் 4-வது வார்டு பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மாதம் ஒரு முறை அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் தான் எங்கள் பகுதிக்கு ஒரு குடும்பத்திற்கு மூன்று குடம்குடிநீர் கிடைப்பதே அரிதாக உள்ளது. இதனால் எங்கள் பகுதியில் உள்ள பொதுமக்கள் குடிப்பதற்கு குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். கண்மாய், ஊருணி, குளங்களிலும் தண்ணீர் வற்றி வறண்டு போய்விட்டது. இதனால் கால்நடைகளும் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது. எங்கள் பகுதிக்கு சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனுக்கள் அளித்துள்ளோம் என்றும் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர், சுப்பிரமணியன், வன்மீகநாதன்,கனகராஜ், கணக்காளர் கருப்பையா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இதேபோல் மங்களக்குடி ஊராட்சி ஊமை உடையான் மடை கிராமத்தைச் சேர்ந்த ஏராளமானோர் தங்கள் கிராமத்தில் உள்ள ஆழ்குழாய் மூலம் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் கிராமத்திற்கே பற்றாக்குறையாக தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் எங்கள் கிராமத்தில் இருந்து தண்ணீர் மற்ற பகுதிக்கு கொண்டு செல்வதற்கு குழாய்கள் பதிக்கப்படுகிறது என்றும் இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.