திருவாலங்காடு வங்கி முன்பு தீக்குளிக்க முயன்ற பெண் வாடிக்கையாளர்


திருவாலங்காடு வங்கி முன்பு தீக்குளிக்க முயன்ற பெண் வாடிக்கையாளர்
x

திருவலாங்காட்டில் வங்கி முன்பு பெண் வாடிக்கையாளர் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு சன்னதி தெருவில் இந்தியன் வங்கி செயல்பட்டு வருகிறது.. இங்கு திருவாலங்காடு, சின்னம்மாபேட்டை, வீரராகவபுரம், பழையனூர் கிராம மக்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இதில் 100-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்களும் அடங்கும்.

இந்நிலையில் திருவாலங்காடில் செயல்படும் மரிக்கொழுந்து மகளிர் சுய உதவிக் குழுவை சேர்ந்தவர்களின் வங்கிக்கணக்கை வங்கி ஊழியர்கள் முடக்கி வைத்துள்ளதாகவும் அதனை விடுவிக்கக்கோரி அந்த குழுவை சேர்ந்த 20 பேர் நேற்று இந்தியன் வங்கி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த குழுவை சேர்ந்த துர்கா (வயது 30) என்பவர் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த திருவாலங்காடு போலீசார் அவரை தடுத்து நிறுத்தி சமரசம் செய்தனர்.

இதுகுறித்து தீக்குளிக்க முயன்ற துர்கா கூறியதாவது:- நான் மகளிர் குழு வாயிலாக கடனாக பெற்ற தொகையை முறையாக செலுத்தி வந்தேன். இருந்தும் என் வங்கி கணக்கு முடக்கப்பட்டது. இதுகுறித்து பலமுறை வங்கி மேலாளரிடம் முறையிட்டும் தீர்வு கிடைக்கவில்லை. மற்றவர்கள் கட்டாததற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும். குழந்தைகளுக்கு பால் வாங்க பணமில்லாததால் என் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்கலாம் என வந்தால் கணக்கு முடக்கப்பட்டதாக கூறி வங்கி ஊழியர்கள் விரட்டுகின்றனர். வேறு வழியின்றி தீக்குளிக்க முயன்றேன் எனத் தெரிவித்தார் .

இதுகுறித்து திருவாலங்காடு வங்கி மேலாளர் பாரி தெரிவித்ததாவது:- மரிக்கொழுந்து சுய உதவிக் குழுவினர் ரூ.8 லட்சத்தை கடந்த 2019-ம் ஆண்டு கடனாக பெற்றனர். 12 பேர் கொண்ட இந்த குழுவில் மாதம் ரூ. 5ஆயிரத்து 500 வீதம் கட்ட வேண்டும். 13 மாதத்தில் முடிக்க வேண்டிய கடன் தொகை இதுவரை கட்டி முடிக்கப்படவில்லை. பாக்கி தொகை ரூ.4 லட்சத்து 20 ஆயிரமாக உள்ளது. இந்த தொகை வாராக்கடனாக மாறியதால் அந்த குழுவில் உள்ள 12 பேரின் வங்கு கணக்கை முடிக்கி உள்ளோம். இதுவரை 20 குழுக்களின் வங்கி கணக்கை முடக்கி உள்ளோம். முறையாக கடனை கட்டிய நபர்களின் கணக்கை விடுவித்துள்ளோம் என்றார்.

திருவாலங்காடு இந்தியன் வங்கியின் முன்பு வங்கி கணக்கை முடக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story