திருவள்ளூர் மாணவி தற்கொலை வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்றம்


திருவள்ளூர் மாணவி தற்கொலை வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்றம்
x

திருவள்ளூர் அருகே பள்ளி விடுதியில் பிளஸ்-2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.

திருவள்ளூர்,

திருத்தணி தக்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூசனம். விவசாயி. இவரது மனைவி முருகம்மாள். இவர்களது ஒரே மகள் சரளா (வயது17). இவர் திருவள்ளுவர் மாவட்ட கீழச்சேரி ஊராட்சியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தனியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்குச் செல்ல சீருடை அணிந்து சக நண்பர்களுடன் பேசிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. பின்னர் சக நண்பர்கள் உணவு அருந்த சென்று விட்டனர் அப்போது தனியாக இருந்த மாணவி சரளா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்த திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்ட் சந்திர தாசன், சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மாணவி தற்கொலை குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகேர்லா செபாஸ் கல்யாண் மற்றும் திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் வருவாய்த்துறையினர் போலீசார் விடுதி காப்பாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் இடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி பள்ளியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் மாணவியின் சொந்த ஊரான தக்களூரில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கீழச்சேரி தனியார் பள்ளி விடுதியில் 12 வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. மாணவி தற்கொலை செய்து கொண்டதையடுத்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வரும் நிலையில் பள்ளிக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

மேலும் சம்பந்தப்பட்ட பள்ளியில் காஞ்சிபுரம் சரக சிஐஜி சத்திய பிரியா மற்றும் சிபிசிஐடி அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.


Next Story