40 கிலோ மீட்டர் துரத்தி சென்று மடக்கிய தோகைமலை போலீசார்


40 கிலோ மீட்டர் துரத்தி சென்று மடக்கிய தோகைமலை போலீசார்
x

வாகன சோதனையின் போது அதிவேகமாக சென்ற காரை 40 கிலோ மீட்டர் துரத்தி சென்று மடக்கிய தோகைமலை போலீசார், தப்பியோடிய மர்மநபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர்

வாகன சோதனை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குளித்தலை மெயின் ரோட்டில் மணப்பாறை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மணப்பாறை பகுதியில் இருந்து குளித்தலை மெயின் ரோட்டில் கர்நாடகா மாநிலத்தின் பதிவு எண் கொண்ட ஒரு சொகுசு கார் வந்தது. போலீசார் அந்த காரை தடுத்து நிறுத்தி காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது திடீரென காரை இயக்கிய அவர்கள் குளித்தலை மெயின்ரோட்டில் அதிவேகமாக சென்றனர்.

இதனால் சந்தேகம் அடைந்த மணப்பாறை போலீசார் இதுகுறித்து உடனே தோகைமலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் குளித்தலை மெயின் ரோட்டில் உள்ள தோகைமலை சோதனைச்சாவடியில் தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் தயார் நிலையில் இருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த சொகுசு காரை தடுத்து நிறுத்த முயன்றனர்.

துரத்தி சென்றனர்

அப்போது கார் போலீசார் மீது மோதுவதுபோல் வந்ததால் விளகிநின்றனர். பின்னர் பாளையம் மெயின் ரோட்டில் தப்பி சென்ற காரை, பின்தொடர்ந்து சென்ற தோகைமலை போலீசார் கொசூர் அருகே உள்ள கொத்தமல்லி மேடு பகுதியில் காரை மடக்கினர். அப்போது காரை அதே சாலையில் வளைத்து தோகைமலை நோக்கி மின்னல் வேகத்தில் மர்மநபர்கள் தப்பி சென்றனர். இதில் விடாமல் துரத்தி சென்ற தோகைமலை போலீசார் அதிவேகமாக சென்ற சொகுசுகாரை பின் தொடர்ந்து துரத்தினர். இதனால் போலீசார் தப்பிக்கவிடாமல் துரத்துவதை அறிந்த மர்மநபர்கள் தோகைமலை அருகே உள்ள நெசவாளர் காலனி மேற்கு பகுதியில் உள்ள ஒரு தரிசுகாட்டில் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

விசாரணை

இதனால் மர்மநபர்கள் விட்டுச்சென்ற சொகுசுகாரை கைப்பற்றி போலீசார் அதனை தோகைமலை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதையடுத்து காரில் வந்தவர்கள் யார்? அவர்கள் எதற்காக போலீசாரை கண்டதும் தப்பி சென்றனர்? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நேற்று முன்தினம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை வெட்டி படுகொலை செய்த வழக்கில் திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் ஒரு வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் கர்நாடகா பதிவு எண் கொண்ட சொகுசுகாரில், மணப்பாறை பகுதியில் இருந்து வந்தபோது, போலீசாரை கண்டதும் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றதால், இந்த கொலை வழக்கில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த சம்பவம் தோகைமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story