தமிழ் முகமூடி அணிந்துகொண்டு ஏமாற்றுவோருக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
“தமிழர்களுக்கு விரோதமான செயல்களை செய்துகொண்டே தமிழ் முகமூடி அணிந்துகொண்டு ஏமாற்றுவோருக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
விருது வழங்கும் விழா
முத்தமிழ் பேரவை அறக்கட்டளை சார்பில் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள முத்தமிழ் பேரவை அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. முத்தமிழ் பேரவை அறக்கட்டளையின் இயக்குனர் பி.அமிர்தம் வரவேற்று பேசினார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
இதில் இயல் செல்வம் விருது பட்டிமன்ற பேச்சாளர் எஸ்.ராஜா, இசை செல்வம் விருது பாடகி எஸ்.மகதி, ராஜ ரத்னா விருது இஞ்சிக்குடி இ.பி.கணேசன், நாட்டிய செல்வம் விருது வழுவூர் எஸ்.பழனியப்பன், வீணை செல்வம் விருது ராஜேஷ் வைத்யா, தவில் செல்வம் விருது இடும்பாவனம் கே.எஸ்.கண்ணன் ஆகியோருக்கு மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
கருணாநிதி பெயரில் விருது
இசை விழாவுடன் சேர்த்து ஆண்டுதோறும் விருதுகளை வழங்குவதை முத்தமிழ் பேரவை வழக்கமாக வைத்திருக்கிறது. முத்தமிழ் பேரவையில் விருது பெறாத தலைசிறந்த கலைஞர்களே இல்லை எனும் அளவுக்கு, அவர்களை கண்டறிந்து, விருதுகளை தொடர்ந்து வழங்கி கொண்டிருக்கிறது. முத்தமிழ் பேரவை விருதை பெற்றோம் என்று சொல்வதே பெருமைக்குரியதாக அமைந்துவிட்டது. இந்த விழாவில் விருது பெற்றவர்களை வாழ்த்துகிறேன்.
இந்த தருணத்தில், ஒரு வேண்டுகோளை முத்தமிழ் பேரவைக்கு வைக்கலாம் என நினைக்கிறேன். கருணாநிதி நூற்றாண்டு விழா ஆண்டு இது என்பதால் இந்த ஆண்டு முதல் கருணாநிதி பெயரால் ஒரு விருதை முத்தமிழ் பேரவை சார்பில் வழங்க வேண்டும் என்று உரிமையுடன் நான் கேட்டுக்கொள்கிறேன். முத்தமிழுக்கு சிறப்புற தொண்டாற்றுபவர்க்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயரிலான விருதும் தனியாக வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பொதுவாக முதல்-அமைச்சர் கலந்து கொள்ளும் விழாவில் முதல்-அமைச்சரிடம்தான் கோரிக்கை வைப்பார்கள். ஆனால் அமிர்தம் மீதான உரிமையின் காரணமாக நான் கோரிக்கை வைக்கிறேன். அதனை அவர் தட்டாமல் ஏற்றுக்கொள்வார் என்று நான் நம்புகிறேன்.
கலைத்தொண்டாற்றி வரும் அரசு
கருணாநிதி எழுதாத எழுத்துகள் இல்லை. பாடல்களை - கவிதைகளை எழுதிக் குவித்தவர் அவர். நாடகங்களை எழுதினார், நடித்தார். பாடல்கள் பாடியதில்லையே தவிர, அதன் ராகங்கள், நுணுக்கங்களை அறிவார். இப்படி முத்தமிழாக வாழ்ந்தவர்தான் நம்முடைய தலைவர் கருணாநிதி. அதனால்தான் முத்தமிழ் பேரவையின் முகப்பில் அவரது சிலை வைக்கப்பட்டுள்ளது. 2.1.2020 அன்று கருணாநிதி சிலையை நான் திறந்து வைத்தேன்.
அது தனிப்பட்ட கருணாநிதியை பெருமைப்படுத்துவதற்காக அல்ல, அவர் மூலமாக முத்தமிழை வளர்ப்பதற்காகத்தான். இன்றைக்கு அவர் பெயரால் மதுரையில் உலகத்தரத்தில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது என்றால், அவர் பெயரால் சென்னை கிண்டியில் உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது என்றால் அதன் மூலமாக மக்களே அந்த பயனை அடைகிறார்கள். கருணாநிதியை முன்வைத்து மக்கள் சேவையை, கலைத்தொண்டை ஆற்றி வரும் அரசாக இன்றைய தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது.
தப்பு கணக்குதான்
இயல், இசை, நாடகத்தை காப்பாற்றுவது என்பது தமிழை காப்பாற்றுவது. தமிழினத்தை காப்பாற்றுவது. ஆனால் இன்று சிலர் தமிழுக்கும், தமிழர்களுக்கும் விரோதமான செயல்களை செய்து கொண்டே தமிழ் முகமூடியை போட்டுக்கொண்டு தமிழ்நாட்டில் உள்ளவர்களை எல்லாம் ஏமாற்றிவிடலாம் என்று கணக்கு போடுகிறார்கள். ஆனால் அவர்கள் போடுவது எல்லாம் தப்பு கணக்குதான். அதை புரிய வைக்கும் வகையில், தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய மக்கள் அனைவரும் தக்க பாடத்தை புகட்டுவார்கள்.
இது போல ஏராளமான இசை விழாக்கள், இலக்கிய விழாக்கள் நடக்க வேண்டும். புதிய புதிய நாடகங்கள் அரங்கேற்றப்பட வேண்டும். அரசியலில் இருக்கும் நாங்கள் அரசியல் தொண்டு மூலமாக தமிழ் வளர்ச்சிக்கு பணியாற்றுவோம். அதே போல கலைத்துறையில் இருக்கும் கலைஞர்கள், உங்கள் துறை மூலமாக தமிழ்க் கலை வளர்ச்சிக்கு பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் பேசினார்.