பயங்கரவாதத்திற்கு எதிராக இருப்பவர்கள் 'தி கேரளா ஸ்டோரி' படத்தை ஆதரிப்பார்கள் - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை விரைவில் பார்க்க உள்ளதாக புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
கோவை,
இயக்குநர் சுதீப்தோ சென் இயக்கத்தில், விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் நடிகைகள் அதா சர்மா, யோகித பிஹானி, சித்தி இத்னானி மற்றும் சோனியா பலானி உள்ளிட்டோர் நடித்துள்ள, 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் கடந்த 5-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது.
ஏற்கனவே இந்த படத்தின் டீசருக்கு இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. இதனால், இந்த படத்துக்கு தமிழகத்தில் தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கலாம் என்று மாநில உளவுத்துறை அரசுக்கு பரிந்துரை வழங்கி இருந்தது. ஆனால் கோர்ட்டில் வழக்கு தள்ளுபடியானதால் இந்த திரைப்படம் திட்டமிட்டப்படி திரைக்கு வந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக தென் தமிழகத்தில் இந்த படம் திரையிடப்படவில்லை.
இந்த நிலையில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை விரைவில் பார்க்க உள்ளதாக புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிற்கு எதிரானதாக இந்த படம் சித்தரிக்கப்படுகிறது. யார் அதற்கு ஆதரவாக இருக்கிறார்களோ, அவர்கள் இந்த படத்தை தங்களுக்கு எதிரானது என்று நினைப்பார்கள். அதே சமயம் பயங்கரவாதத்திற்கு எதிராக இருப்பவர்கள் 'கேரளா ஸ்டோரி' படத்தை ஆதரிப்பார்கள்" என்று தெரிவித்தார்.