திருத்தணி முருகன் கோவிலில் திருப்படி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாட்டம் - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்
திருத்தணி முருகன் கோவிலில் திருப்படி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக சிறந்து விளங்கும் திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டின் கடைசி நாளான நேற்று திருப்படி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவையொட்டி, அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜைகள் செய்யப்பட்டு தங்க, வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டது. இதனையடுத்து மலையடிவாரத்தில் உள்ள சரவணப்பொய்கை திருக்குளம் அருகில் முதல் திருப்படி மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. கோவில் நிர்வாகம் தலைமையில் பஜனைக் குழுவினர் திருப்புகழ் திருப்படி திருவிழாவை தொடங்கி வைத்தனர். ஆண்டுக்கு 365 நாட்கள் என்ற கணக்கின்படி, ஓர் ஆண்டை குறிக்கும் வகையில் அமைந்துள்ள 365 திருப்படிகளுக்கு மலர்கள் வைத்து கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து பூஜைகள் செய்யப்பட்டது.
அதேநேரத்தில் பஜனை குழுவினர் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் மற்றும் பக்தி இன்னிசை பாடல்களை இசைத்துக் கொண்டு மலை கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டனர். தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த பெண்கள் படிகளுக்கு மஞ்சள் குங்குமமிட்டு கற்பூரம் ஏற்றி வைத்து தேங்காய் உடைத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி முருகப்பெருமானை தரிசித்தனர்.
காலை 11 மணிக்கு உற்சவர் தங்கத் தேரில் எழுந்தருளி மலைக் கோவில் மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். விழாவில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீன்ட வரிசையில் நின்று முருக பெருமானை வழிபட்டனர். இந்த விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டது.
மேலும் புத்தாண்டை முன்னிட்டு திருத்தணி மற்றும் முருகன் கோவில் வளாகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தலைமையில் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணிகளை போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் நேரில் ஆய்வு செய்தார்