திருப்பத்தூர்: 15 மூட்டைகளில் போதைப்பொருட்கள் கடத்தி வந்த கார் விபத்து - 2 பேர் காயம்
திருப்பத்தூர் அருகே 15 மூட்டைகளில் போதைப்பொருட்கள் கடத்தி வந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் கடத்தல் காரர்கள் 2 பேர் காயம் அடைந்தனர்.
நாட்டறம்பள்ளி,
கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி கார் ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திருப்பத்தூர் மாவட்ட எல்லை பகுதியில் வந்து கொண்டிருந்த போது நாட்டறம்பள்ளி அடுத்த லட்சுமிபுரம் அருகே திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்றம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலத்த படுகாயம் அடைந்த பெங்களூருரை சேர்ந்த மேலேபாய்(வயது 25), சரண்சிங்(25) ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், காரை சோதனை செய்ததில் அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா ஆகிய போதைப் பொருட்கள் அடங்கிய 15 மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து நாட்டறம்பள்ளி போலீசார் காரில் இருந்த போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் போதைப் பொருட்களை கடத்தியதாக மேற்கண்ட 2 பேர் மீது நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.