திருப்பூர்: மின் கட்டண உயர்வை கண்டித்து தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்
தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்,
கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கிய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் சார்பில், தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு அதன் மூலம் தமிழக அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர்.
இந்த நிலையில், மின் கட்டண உயர்வை கண்டித்து திருப்பூர் மாவட்டம் காரணம்பேட்டை பகுதியில் இன்று தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், நிலைக் கட்டணம் 420% உயர்ந்துள்ளதாகவும், 'பீக் ஹவர்' என்ற வகையில் காலை 6-10 மணி வரை மற்றும் மாலை 6-10 மணி வரை நிர்ணயம் செய்து கூடுதலாக 15% கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் மாதம் சுமார் 35% வரை மின் கட்டணம் உயர்ந்துள்ளதாகவும், கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.