திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணை வளாகம் திருச்சியில் தொடங்க நடவடிக்கை


திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணை வளாகம் திருச்சியில் தொடங்க நடவடிக்கை
x

திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணை வளாகத்தை திருச்சியில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று துணைவேந்தர் கிருஷ்ணன் கூறினார்.

திருச்சி

திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணை வளாகத்தை திருச்சியில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று துணைவேந்தர் கிருஷ்ணன் கூறினார்.

இது குறித்து அவர் திருச்சியில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:-

பட்டமளிப்பு விழா

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக 7-வது பட்டமளிப்பு விழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. பல்கலைக்கழக வேந்தர் பத்மநாபன் தலைமை தாங்குகிறார். சிறப்பு அழைப்பாளராக புதுடெல்லி சர்வதேச மைய மரபணு பொறியியல் மற்றும் உயிரி தொழில்நுட்பம் இயக்குனர் ரமேஷ் வி.சோண்டி கலந்து கொள்கிறார். இதில் 523 மாணவிகள், 394 மாணவர்கள் என 917 பேர் பட்டம் பெறுகிறார்கள். இதில் 36 மாணவ-மாணவிகள் முனைவர் பட்டமும், 39 பேர் தங்க பதக்கமும் பெறுகிறார்கள்.

இந்த பல்கலைக்கழகத்தில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 2,500 மாணவர்கள் கல்வி கற்று வருகிறார்கள். தமிழக மாணவர்களின் எண்ணிக்கை 30 சதவீதமாகும். இந்த எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என விரும்புகிறோம். இங்கு முதுகலை பட்டம் ரூ.20 ஆயிரம் கட்டணத்தில் படித்து விடலாம். பொருளாதாரம், வணிகவியல் உள்ளிட்ட 27 துறைகளின் கீழ் 64 வகையான பாடப்பிரிவுகள் உள்ளன. இந்தாண்டு உணவு தொழில்நுட்பம், பயோ-இன்பர்மேட்டிக்ஸ் உள்பட 4 புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

திருச்சியில் துணை வளாகம்

நான் முதல்வன் திட்டம் மூலம் நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தமிழகம் முழுவதும் வழங்கப்பட உள்ளது. திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணை வளாகத்தை திருச்சியில் தொடங்க பாரதிதாசன் பல்கலைக்கழகம் அருகே சூரியூரில் சுமார் 5 ஏக்கர் நிலம் ஒதுக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டவுடன் இந்தாண்டுக்குள் பணிகள் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது பதிவாளர் சுலோச்சனா சேகர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story