பாஜக குற்றச்சாட்டை ஏற்று திமுக அரசு எடுத்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது; அண்ணாமலை டுவிட்


பாஜக குற்றச்சாட்டை ஏற்று திமுக அரசு எடுத்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது; அண்ணாமலை டுவிட்
x

“ஊட்டச்சத்து பெட்டக டெண்டர் விவகாரத்தில் அண்ணாமலை வருத்தம் தெரிவிக்காவிட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்து இருந்தார்.

சென்னை,

ஊட்டச்சத்து பெட்டக டெண்டரில் "எங்கள் குற்றச்சாட்டை ஏற்று திமுக அரசு எடுத்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது" என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது;- கொடுத்தபின் ஏன் கொடுத்தீர்கள் என்று கேட்பதால் எந்த பயனும் இல்லை. கருப்பு பட்டியலில் வைக்கப்பட வேண்டிய நிறுவனத்திடம் முறைகேடாகப் பணம் பெற்று ஊட்டச்சத்து தொகுப்பு டென்டரை வழங்கப்போவதாக ஆதாரங்களை தமிழக பாஜக வெளியிட்டது.

அந்த டென்டரில் பங்கேற்ற வேறொரு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக செய்தியைப் பார்த்தோம். பாஜக வைத்த குற்றச்சாட்டுகளின் எதிரொலியாக வேறு வழியின்றி ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தாலும், எங்கள் குற்றச்சாட்டை ஏற்று திமுக அரசு எடுத்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

லஞ்ச ஒழிப்புத் துறையில் பாஜக அளித்த புகாரையும் தமிழக அரசு விசாரித்து குற்றம் செய்தவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும். மேலும் ஆவின் health mixன் நிலை என்ன என்பதையும் அரசு தெளிவுபடுத்த வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, அண்ணாமலை கூறிய நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்படாத நிலையில், "ஊட்டச்சத்து பெட்டக டெண்டர் விவகாரத்தில் அண்ணாமலை வருத்தம் தெரிவிக்காவிட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்து இருந்தார்.

அண்ணாமலை குற்றச்சாட்டு என்ன?

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணிகளுக்கு, ஊட்டச்சத்து மாவு, ஆவின் நெய், பேரீச்சம்பழம், இரும்பு சத்து டானிக் உள்பட 8 பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது. ஊட்டச்சத்து பெட்டகங்கள் கொள்முதல் செய்வதற்காக தமிழக அரசு விடுத்த டெண்டரில் முறைகேடு நடந்ததாக தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை குற்றம் சாட்டினார். மேலும், ஊட்டச்சத்து பெட்டகங்களில் உள்ள எல்லா பொருட்களையும் சப்ளை செய்வதற்கான டெண்டரில் விதிமுறைகளை மீறி 'அனிதா டெக்ஸ்காட்' என்ற தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட உள்ளதாக அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஊட்டச்சத்து பெட்டக முறைகேடு தொடர்பாக அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆதாரங்களுடன் விளக்கம் அளித்தார். மேலும், விதிமுறைகளின்படி ஊட்டச்சத்து பெட்டகத்துக்கான டெண்டர் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது.


Next Story