அரசு பணியாளர் தேர்வாணைய அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறதா?
அரசு பணியாளர் தேர்வாணைய அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறதா? என தேர்வர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
'காத்துட்டா இருந்தாலும், அது கவர்மெண்ட் துட்டா இருக்கணும்', 'அரசாங்க உத்தியோகம்னா, சும்மாயில்லே?' -இது போன்ற வாய்மொழிகள் இன்னமும் கிராமங்களில் வலம் வருகின்றன. பணி பாதுகாப்பு, சுதந்திரம், கணிசமான சம்பளம், பதவி உயர்வுக்கான வாய்ப்பு, ஓய்வூதியம் போன்ற காரணிகளே, பொதுவாக ஒருவரை அரசு வேலைக்கு ஈர்ப்பதாக பார்க்கப்படுகிறது.
ஒருகாலத்தில் அரசு துறைகளில் இருக்கும் பணிகளுக்கு ஆட்களை கூப்பிட்டு, கூப்பிட்டு கொடுத்து இருக்கிறார்கள். காலப்போக்கில் கல்வியறிவு அதிகரித்து, படித்து முடிக்கும் பட்டதாரிகளின் எண்ணிக்கையும் வெகுவாக உயர்ந்தது.
டி.என்.பி.எஸ்.சி.
அதன் பின்னர், தகுதியான நபர்களை தேர்வு செய்து பணியில் சேர்க்கும் முறை கடந்த 1929-ம் ஆண்டு வாக்கில் இருந்து தொடங்கி இருக்கிறது. முதலில் இந்த அமைப்புக்கு மெட்ராஸ் தேர்வாணையம் என்ற பெயர் இருந்த நிலையில், மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த பிறகு, 1957-ம் ஆண்டில் மெட்ராஸ் அரசு பணியாளர் தேர்வாணையம் என்றும், அதைத்தொடர்ந்து, சென்னை மாகாணம், தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டபோது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) என்றும் மாறியது.
1954-ம் ஆண்டில் வகுக்கப்பட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய ஒழுங்குமுறை மற்றும் நடத்தை விதிகள் அடிப்படையில் இந்த ஆணையம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாகவே அரசுத்துறைகளில் அடிமட்ட அளவில் இருந்து உயர்மட்ட அளவில், பணியாளர்கள் முதல் அதிகாரிகள் வரையில் இருக்கும் காலிப்பணியிடங்கள் குரூப்-1, 2, 2 ஏ, 3, 4 என பிரிவுகளாக பிரித்து நிரப்பப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் அரசுத்துறைகளில் ஓய்வு பெறுபவர்களின் காலிப்பணியிடங்கள், புதிதாக துறைகளில் தோற்றுவிக்கப்படும் இடங்கள் ஆகியவற்றை கணக்கிட்டு, அந்தந்த துறைகள் அளிக்கும் பட்டியல்களை கொண்டு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுத்திட்ட அட்டவணையை வெளியிட்டு வருகிறது.
அந்த அட்டவணையில் குறிப்பிட்டு இருக்கும் காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்புகளை வெளியிடுவதோடு, அதற்காக விண்ணப்பிக்கும் தகுதியானவர்களுக்கு தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு என அனைத்து பணிகளையும் மேற்கொண்டு, அந்த பணிக்கு தகுதிவாய்ந்தவர்களை டி.என்.பி.எஸ்.சி. தேர்வு செய்து பணி வழங்குகிறது. தொழில்நுட்பங்கள் வளர, வளர அதற்கு ஏற்ப தேர்வு முறைகளிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. குறுக்கு பாதைகளை தேடுபவர்கள் எங்கேதான் இல்லை? என்று சொல்லும் வகையில், இந்த தேர்வு முறைகளிலும் சிலர் முறைகேடுகளில் ஈடுபட்ட சம்பவங்களும் கடந்த காலங்களில் அரங்கேறியது என்பது, மறுக்க முடியாத உண்மை.
வயது விலக்கு
அந்த சுவடுகள் மீண்டும் டி.என்.பி.எஸ்.சி. மீது பதிந்துவிடக்கூடாது என்ற நோக்கில், அதனை பொறுப்பேற்று முன்னெடுத்து செல்லும் அதிகாரிகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, தற்போது அதுபோன்ற முறைகேடுகள் பற்றிய எந்த குற்றச்சாட்டுகளுக்கும் இடம் கொடுத்துவிடாதபடி, ஒவ்வொரு ஆண்டும் மிகுந்த எச்சரிக்கையுடன் தேர்வை நடத்தி வருகின்றனர். இதில் குரூப்-4, குரூப்-2, 2 ஏ ஆகிய பிரிவுகளில் தான் அதிகமான பணியிடங்களும் இருக்கும் அதிகமான போட்டிகளும் இருக்கும்.
உதாரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட குரூப்-4 பணியிடங்களுக்கு இதுவரை இல்லாத வகையில் 21 லட்சத்து 85 ஆயிரத்து 328 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இது பெருமையா? என்று கேட்டால், இல்லை என்றே சொல்ல முடியும். ஏனென்றால், படித்து முடித்த இளைஞர்களுக்கு சரியான வேலைவாய்ப்பு கிடைக்காமல் எவ்வளவு பேர் காத்துக்கிடக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சிறிய உதாரணமாகவே பார்க்கப்படுகிறது.
கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் கொரோனா தொற்று காரணமாக எதிர்பார்த்தபடி பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்படாததால், அதிகபட்ச வயது வரம்பை கடந்தவர்களுக்காக, 2 ஆண்டுகள் வயது விலக்கு அளிக்கப்பட்டது. இந்த சலுகைகளை பெற்றவர்களுக்கு நடப்பு ஆண்டில் அறிவிக்கப்படும் காலிப்பணியிடங்களில் தேர்வாவது தான் கடைசி வாய்ப்பாக இருக்கும்.
அதிர்ச்சி அளிக்கிறது
அப்படி எதிர்பார்த்து காத்திருந்த பலருக்கு, டி.என்.பி.எஸ்.சி. கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட ஆண்டுத்திட்ட போட்டி தேர்வு அட்டவணை ஏமாற்றத்தையே தந்திருக்கிறது. அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கக்கூடிய குரூப்-2, 2 ஏ, 3 ஏ பதவிகளுக்கான அறிவிப்பு இல்லாதது, குரூப்-4 பணியிடங்களுக்கான காலி இடங்கள் எவ்வளவு? என்ற விவரங்கள் தெரிவிக்காதது அதிர்ச்சியை கொடுத்திருக்கின்றன.
குரூப்-1 தேர்வுக்கு ஆகஸ்டு மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு நவம்பரில் முதல் நிலை, 2024 ஜூலையில் முதன்மை, டிசம்பரில் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் எத்தனை பணியிடங்கள் என்ற விவரங்கள் இல்லாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டுகளில் இருந்து பார்க்கும்போது, ஆண்டுக்கு 23 ஆயிரம், 10 ஆயிரம், 9 ஆயிரம், 8 ஆயிரம் காலிப்பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்பப்பட்டு வந்த நிலை மாறி, தற்போது ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 3 ஆயிரம் முதல் 6 ஆயிரம் என்ற அளவிலேயே பணியிடங்கள் அறிவிக்கப்படுகின்றன.
சோளப்பொரி
இது யானை பசிக்கு சோளப்பொரி போல் அல்லவா தெரிகிறது? வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கானோருக்கு, ஆயிரத்தில் பணியிடங்கள் என்பது எப்படி சரியாக இருக்கும்? அதிலும் இந்த ஆண்டு அறிவிப்பில் இதுவரை 1,754 காலிப்பணியிடங்கள் குறித்த தகவல் மட்டுமே டி.என்.பி.எஸ்.சி. அட்டவணையில் இடம்பெற்றிருப்பது, அரசுப்பணிகளில் சேரவேண்டும் என்ற ஆர்வத்தில் இரவு பகலாக படித்து கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு பேரிடியாக அமைந்திருக்கிறது.
இதுபற்றி தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்களிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-
ஏமாற்றம்
ராசிபுரம் பகலவன்:-
தற்போது வெளியிடப்பட்ட ஆண்டு திட்டத்தில் மிக குறைந்த காலிப்பணியிடங்கள் மட்டும் தான் அறிவித்தனர். அதில் ஒருங்கிணைந்த குரூப் 2 மற்றும் 2A பற்றி எதுவும் இல்லை. குரூப் 4 தேர்வும் 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தான் நடக்க உள்ளது. மேலும் அதில் மின்சாரத்துறை காலிப்பணியிடங்கள், ஆவின் நிறுவனம் சார்ந்த காலிப்பணியிடங்கள் அல்லது இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த காலிப்பணியிடங்கள் என எதுவும் இல்லை. அந்த அறிவிப்பு இளைஞர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. அதனால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
வாழ்க்கை பாதையே மாறும்
தேர்வர் கணேஷ்:-
தற்போது வெளியாகி உள்ள 2023-ம் ஆண்டுக்கான ஆண்டு திட்ட அட்டவணையில், குரூப்-2, 2ஏ பணியிடங்களுக்கான அறிவிப்பு எதுவும் இடம்பெறவில்லை. அதேபோல் காலிப் பணியிடங்களும் குறைவாக கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் குரூப்-1 பணியிடங்களின் எண்ணிக்கை விவரமும் ஏதுமில்லை. அது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. மேலும், குரூப்-4 பணிக்கான அறிவிப்பை மட்டுமே வெளியிட்டு உள்ளனர். ஆனால் தேர்வை அடுத்த ஆண்டுக்கு கொண்டு போய்விட்டார்கள். அதனால் தேர்வு மற்றும் தேர்வு முடிவுகளுக்காக சுமார் 2 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இதே நிலை நீடித்தால் தேர்வுகளுக்கு, தேர்வின் மீதான ஆர்வம் குறைந்து விடும். வாழ்க்கை பாதையே மாறும் சூழல் ஏற்படும். எனவே அதை புரிந்து டி.என்.பி.எஸ்.சி. சரியாக திட்டமிட்டு தேர்வை நடத்த வேண்டும்.
அணியாபுரம் முதுகலை பட்டதாரி கிருஷ்ணன்:-
கொரோனா காலத்தில் தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. தற்போது வெளியாகி உள்ள புதிய அறிவிப்பில் எதிர்பார்த்த காலிப் பணியிடங்களுக்கான தகவல் இல்லை. குறிப்பாக தோட்டக்கலை துறை சார்ந்த பணிகள் குறித்த அறிவிப்பு ஏதும் இடம் பெறவில்லை. காலிப்பணியிடங்கள் அதிக அளவில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே ஆண்டுதோறும் தேர்வை நடத்த வேண்டும். அப்போது தான் காலி பணியிடங்கள் நிரப்பப்படுவதோடு, என்னை போன்றோருக்கு பயனுள்ளதாக இருக்கும்.
வெறும் அறிவிப்பு
திருச்செங்கோட்டை சேர்ந்த கார்த்திகேயன்:-
நான் அரசு பணிக்காக டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் தேர்வுகளை எழுதி வருகிறேன். இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள அட்டவணை அதிர்ச்சி அளிக்கிறது. குறிப்பாக குரூப்-4-க்கு வெறும் அறிவிப்பு மட்டும் உள்ளது. அந்த தேர்வுக்கான அறிவிப்பு நவம்பரில் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த ஆண்டு தேர்வு இல்லாதது போல் தான் உள்ளது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அந்தந்த ஆண்டுகளில் தேர்வை நடத்தி முடிவுகளை வெளியிடுவதை போல, டி.என்.பி.எஸ்.சி.யும் தேர்வுகளை நடத்தி முடிவுகளை அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் தேர்வர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு டி.என்.பி.எஸ்.சி. புதிய அறிவிப்புகளை வெளியிடவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அரசு பணியாளர்களுக்கு கொரோனா காலத்தில் ஓய்வு பெறும் வயதை 58-ல் இருந்து 60 ஆக மாற்றி அமைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டதால், ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாமல் இருக்கிறது என்றும், இனி வரக்கூடிய நாட்களில் 60 வயதை எட்டுபவர்கள் பணி இடங்கள் காலியிடங்களாக கருதி பட்டியல் வரும். அவ்வாறு வரும்போது, அந்த காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பும் வெளியிடப்படும் என்றும் டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் சொல்லப்படுகிறது.