கடனை செலுத்தியவுடன் ஆவணங்களை வழங்காத வங்கிகள், வாடிக்கையாளர்களுக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்


கடனை செலுத்தியவுடன் ஆவணங்களை வழங்காத வங்கிகள், வாடிக்கையாளர்களுக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 27 Jun 2023 6:45 PM GMT (Updated: 28 Jun 2023 11:47 AM GMT)

கடனை செலுத்திய பின்னரும் வாடிக்கையாளர்களுக்கு ஆவணங்களை உடனடியாக வழங்காத வங்கிகள் ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்க நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

நாமக்கல்

ரூ.5 லட்சம் கடன்

நீலகிரி மாவட்டம் இத்தலார் நியூஹட்டியில் வசித்து வந்தவர் சிவராஜ். இவர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கனரா வங்கி கிளையில் கடந்த 2004-ம் ஆண்டு வீடு கட்டுவதற்காக ரூ.5 லட்சம் கடன் பெற்று உள்ளார். இந்த நிலையில் சிவராஜ் கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலும், அவரது மனைவி செப்டம்பர் மாதத்திலும் இறந்து விட்டனர். இதன் பின்னர் கடந்த 2013-ம் ஆண்டு தந்தை பெற்ற கடனுக்காக அவரது மகன் சுஜித் ரூ.2 லட்சம் வங்கிக்கு செலுத்தி உள்ளார். இதன் தொடர்ச்சியாக 2016-ம் ஆண்டு வங்கியில் சமரச ஒப்பந்தப்படி ரூ.8 லட்சம் செலுத்தி கடனை முடித்து உள்ளார்.

கடன் முழுவதையும் செலுத்திய பின்னர் வங்கியில் அடமானம் வைத்த அசல் ஆவணங்களை பலமுறை சுஜித் வங்கி அதிகாரிகளிடம் கேட்டு உள்ளார். ஆனால் அதனை வங்கி திருப்பி தராததால் கடந்த 2018-ம் ஆண்டு அசல் ஆவணங்களை கேட்டுஅவர் கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் வங்கி மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விரைவான விசாரணைக்காக கடந்த ஜூலை மாதம் நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டிற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று, இவ்வழக்கில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ.ராமராஜ், உறுப்பினர் ஏ.எஸ்.ரத்தினசாமி முன்னிலையில் தீர்ப்பு வழங்கினார்.

அதில் 4 வார காலத்திற்குள் சுஜித்தின் தந்தையால் வங்கியில் சமர்ப்பிக்கப்பட்ட அசல் ஆவணங்களை வங்கி திருப்பி வழங்க வேண்டும். அந்த ஆவணங்கள் காணாமல் போய் இருந்தால் ஆவணங்களின் சான்றிட்ட நகல்களை சார் பதிவகத்தில் பெற்று தங்களிடம் காணாமல் போய்விட்டது என்ற கடிதத்துடன் வழங்க வேண்டும். மேலும் வங்கியின் சேவை குறைபாட்டிற்கு இழப்பீடாக ரூ.5 லட்சத்தை வழக்கு தாக்கல் செய்தவருக்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ரூ.1 லட்சம் இழப்பீடு

இதேபோன்று நாமக்கல்-மோகனூர் சாலை கே.கே.நகரை சேர்ந்தவர் பி.கே. வெங்கடாஜலம். இவர் வணிக நடவடிக்கைக்காக கடந்த 2014-ம் ஆண்டு நாமக்கல்லில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.2 கோடியே 20 லட்சம் கடன் பெற்று இருந்தார். இதற்கு பிணையாக தனது பெயரில் இருந்த சொத்து பத்திரம் மற்றும் தனது மனைவி சுசீலா பெயரில் இருந்த சொத்து பத்திரம் ஆகியவற்றை கொடுத்து இருந்தார்.

கடந்த 2015-ம் ஆண்டு கடனை செலுத்திய பின்னரும், ஆவணங்களை ஓராண்டு கழித்துதான் வங்கி அசல் ஆவணங்களை திருப்பி வழங்கியது. எனவே வங்கி நிர்வாகம் ஆவணங்களை திருப்பி வழங்க ஏற்பட்ட கால தாமதத்திற்கு இழப்பீடு தர வேண்டும் என சுசீலா வங்கி மீது நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் புலனாய்வு கமிட்டி தலைவர் வக்கீல் செல்வம் மூலம் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கில் நீதிபதி ராமராஜ், சுசீலாவுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு 4 வார காலத்திற்குள் வங்கி நிர்வாகம் வழங்க வேண்டும் என தீர்ப்பு கூறினார்.


Next Story