தக்காளி, மஞ்சள் பயிர்களுக்கு ஆதார விலை வழங்க வேண்டும்


தக்காளி, மஞ்சள் பயிர்களுக்கு ஆதார விலை வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 27 Sep 2023 7:30 PM GMT (Updated: 27 Sep 2023 7:30 PM GMT)

தக்காளி, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஆதார விலை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.

தர்மபுரி

தக்காளி, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஆதார விலை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.

நீர்ப்பாசன திட்டங்கள்

தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா தலைமை தாங்கினார். பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு நீர்ப்பாசன திட்டங்கள் நிலுவையில் உள்ளன. இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே நிலுவையில் உள்ள நீர்ப்பாசன திட்டங்களை விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். கரும்பு பயிரில் வேர்ப்புழு தாக்குதல் அதிக அளவில் உள்ளது. அதை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் பாதிக்கப்பட்டுள்ள கரும்பு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

விலை வீழ்ச்சியால் பாதிப்பு

தர்மபுரி மாவட்டத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய ஒகேனக்கல் காவிரி ஆற்றின் உபரி நீரை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும். தக்காளி, மஞ்சள், கொப்பரை தேங்காய், பருத்தி ஆகியவற்றை சாகுபடி செய்யும் விவசாயிகள் திடீர் விலை வீழ்ச்சியால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.

இதை கருத்தில் கொண்டு மேற்கண்ட விவசாய விளை பொருள்களுக்கு ஆதார விலை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்களை விவசாய பணிக்கு பயன்படுத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் பேசினார்கள்.

உரிய நடவடிக்கை

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா பேசுகையில், வேளாண்மை துறை சார்ந்த அனைத்து திட்டங்கள் விவசாயிகளுக்கு முழுமையாக சென்று சேர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்ற உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்என்றுகூறினார்.


Next Story