நாகை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை..!
வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு நாகை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நாகை,
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் இந்த ஆண்டுக்கான பெருவிழா கடந்த மாதம்(ஆகஸ்டு) 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் தமிழ், ஆங்கிலம், மராத்தி, கொங்கனி உள்பட பல்வேறு மொழிகளில் திருப்பலி நிகழ்ச்சிகள் நடந்தன.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி நேற்று இரவு கொட்டும் மழையிலும் கோலாகலமாக நடந்தது. தேர் பவனியின்போது திரண்டு இருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மாதா தேர் மீது பூக்களை வீசி 'மரியே வாழ்க' என கோஷம் எழுப்பி மாதாவை வேண்டி கொண்டனர்.
இந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று (வெள்ளிக்கிழமை) ஆரோக்கிய மாதா அன்னையின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்ய வருகிற 23-ந் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்னையின் பிறந்தநாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு விண்மீன் ஆலயத்தில் தஞ்சை மறை மாவட்ட பரிபாலகர் சகாயராஜ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாலை திருக்கொடி இறக்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து பேராலய கீழ்கோவிலில் மாதா மன்றாட்டு, திவ்யநற்கருணை ஆசி, தமிழில் திருப்பலி நிறைவேற்றப்படுவதுடன் ஆண்டு திருவிழா நிறைவடைகிறது.