தக்காளி விலை கிடுகிடு உயர்வு


தக்காளி விலை கிடுகிடு உயர்வு
x
தினத்தந்தி 3 July 2023 6:05 PM GMT (Updated: 4 July 2023 8:36 AM GMT)

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வேலூர்

விலை உயர்வு

சமையலில் முக்கிய அங்கம் வகிப்பது தக்காளி. ஏழை மக்கள் முதல் பணக்காரர்கள் வரை அனைத்து தரப்பினரும் வாங்கி பயன்படுத்தும் பொருளாக உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தக்காளி விலை குறைந்து இருந்தது. ஆனால் தற்போது தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தக்காளி மட்டுமல்லாது பிற காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது.

இதுகுறித்து வேலூர் நேதாஜி மார்க்கெட் காய்கறி வணிகர் சங்க தலைவர் எல்.கே.எம்.பி.வாசு கூறியதாவது:-

வேலூர் நேதாஜி மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது.

ரூ.100-க்கு விற்பனை

தற்போது தக்காளி வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது. பிற காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. அதன்படி காய்கறிகளின் மொத்த விலை விவரம் (ஒரு கிலோ) வருமாறு:-

கேரட் ரூ.30 முதல் ரூ.40 வரையும், பீன்ஸ் ரூ.80 முதல் ரூ.100 வரையும், கத்தரிக்காய் ரூ.80 முதல் ரூ.90 வரையும், தக்காளி ரூ.80 முதல் ரூ.100 வரையும், பூண்டு ரூ.100 முதல் ரூ.120 வரையும், சின்னவெங்காயம் ரூ.60 முதல் ரூ.100 வரையும், பச்சை மிளகாய் ரூ.100, அவரைக்காய் ரூ.50 முதல் ரூ.60 வரையும், பாகற்காய் ரூ.50 முதல் ரூ.60 வரையும் விற்பனையாகிறது.

இஞ்சி கிலோ ரூ.200

இந்த விலை தரத்துக்கு ஏற்ற வகையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இஞ்சி ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை வியாபாரிகள் மேற்கண்ட விலையில் இருந்து சற்று உயர்த்தி காய்கறிகளை விற்பனை செய்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story