மதுரையில் தக்காளி கிலோ ரூ.160-க்கு விற்பனை -"விலை குறைய இன்னும் 20 நாள் ஆகும்" என வியாபாரிகள் கருத்து
மதுரையில் மீண்டும் தக்காளி விலை அதிகரித்து, நேற்று கிலோ ரூ.160-க்கு விற்பனையானது.
மதுரையில் மீண்டும் தக்காளி விலை அதிகரித்து, நேற்று கிலோ ரூ.160-க்கு விற்பனையானது.
தக்காளி விலை
தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக, தக்காளி விலை அதிகமாக உள்ளது. வெளி மாநிலங்களில் பலத்த மழை காரணமாக தக்காளி சாகுபடி பாதிக்கப்பட்டதால் இந்த விலையேற்றம் நீடிக்கிறது.
இந்த நிலையில், மேலும் விலை அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. குறிப்பாக நேற்று மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் தக்காளியின் மொத்த விலை கணிசமாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது.
நேற்று காலையில் அங்கு 15 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டியின் விலை ரூ.1000 முதல் ரூ.1600 வரை இருந்தது. இதன் காரணமாக மாட்டுத்தாவணியில் சில்லறை விலையானது தரத்தை பொறுத்து ரூ.120, ரூ.140 என விற்பனையானது. இதனை தவிர்த்து, வெளி இடங்களில் உள்ள கடைகள், மளிகை கடைகள், சின்ன சின்ன மார்க்கெட்டுகளில் தக்காளியின் விலை ரூ.160 வரை இருந்தது.
வியாபாரிகள் கருத்து
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-
வெங்காயம், மிளகாய் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால், தக்காளி விலை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. ஆடி மாதம் 18-ந்தேதிக்கு பின்னர் தக்காளி விலை குறையலாம் என எதிர்பார்த்தோம். ஆனால், அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை. காரணம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் மழை காரணமாக அங்கிருந்து தக்காளி வரத்து வெகுவாக குறைந்துவிட்டது. தற்போது அந்த மாநிலங்களுக்கு, தமிழகத்தில் இருந்து தக்காளி ஏற்றுமதி செய்ய வேண்டிய நிலை உள்ளது. அந்த மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள், தமிழகத்திற்கு வந்து தக்காளியை மொத்தமாக கொள்முதல் செய்கின்றனர். இதனால், தமிழக மார்க்கெட்டுகளுக்கு தக்காளி வரத்து வெகுவாக குறைந்ததால், விலை அதிகரித்து இருக்கிறது.. இன்னும் 20 நாட்களுக்கு தக்காளி விலை இதுபோல் நீடிக்கும் என தெரிகிறது. அதன்பின்னர் படிப்படியாக விலை குறையும் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.