அரசு பள்ளியில் தொடுதிரை கணினி
கீழையூர் ஊராட்சி ஒன்றியம் பிரதாபராமபுரம் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் திறன்மிகு தொடுதிரை கணினி வகுப்பை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் திறந்து வைத்தார்.
வேளாங்கண்ணி:
கீழையூர் ஊராட்சி ஒன்றியம் பிரதாபராமபுரம் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் திறன்மிகு தொடுதிரை கணினி வகுப்பை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தொடுதிரை கணினி
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கி வரும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன் அடிப்படையில் பிரதாபராமபுரம் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் திறன்மிகு தொடுதிரை கணினி வகுப்பு தொடங்கி வைக்கப்பட்டது. இதனால் மாணவர்களின் கல்வி திறன் மேம்பாடு அதிகரிக்கும். கற்றலும் வலிமையாக இருக்கும். மாணவர்கள் தங்களுக்கு தேவையான பாடம் குறித்த விளக்கத்தினை மிகவும் துல்லியமாக அறிந்து கொள்ள உதவும்.
உலக அளவில் கல்வி குறித்த தகவல்களை தொடுதிரை மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்திக்கொண்டு திறனை வளர்த்து கொள்ள வேண்டும். சுமார் 1.80 லட்சம் மதிப்பிலான இந்த தொடுதிரையினால் தமிழ் மற்றும் ஆங்கிலம் வழி கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் பயன்பெறுகின்றனர் என்றார்.
மாணவர்களுக்கு பரிசு
தொடர்ந்து 2022-23-ம் ஆண்டில் 12-ம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கும், இந்த ஆண்டு காலாண்டு தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிக்கும் பரிசுகளை கலெக்டர் வழங்கினார்.
மேலும் பிரதாபராமபுரம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் கல்வி கற்பதின் நோக்கத்திற்காக அமைக்கப்பட்டுள்ள ரூ.58 ஆயிரத்து 500 மதிப்புள்ள ஸ்மார்ட் டி.வி.யை கலெக்டர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பிரதாபராமபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சிவராசு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெற்றிச்செல்வன், பாத்தி ஆரோக்கிய மேரி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.