கன்னியாகுமரியில் சுற்றுலா படகு போக்குவரத்து சேவை 3 மணி நேரம் நீட்டிப்பு
திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபத்திற்கான படகு போக்குவரத்து சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி,
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இருப்பினும் விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகை தருவார்கள்.
இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள், சூரிய உதயத்தை கண்டு ரசிப்பதுடன், விவேகானந்தை நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு சவாரி செய்தும் மகிழ்வர்.
இந்த நிலையில், திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபத்திற்கான படகு சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவெளியின்றி படகு சேவை நடைபெற்று வருகிறது.
பொங்கல் பண்டிகையையொட்டி சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருவார்கள் என்பதால் படகு போக்குவரத்து சேவை 3 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வருகிற 15 முதல் 3 நாட்களுக்கு 3 மணி நேரம் படகு சேவை நீட்டிப்பு செய்யப்படும் என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.