ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்


ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 1 Oct 2023 1:00 AM IST (Updated: 1 Oct 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

தொடர் விடுமுறையையொட்டி ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் மலைரெயிலில் பயணம் செய்து குதூகலம் அடைந்தனர்.

நீலகிரி

தொடர் விடுமுறையையொட்டி ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் மலைரெயிலில் பயணம் செய்து குதூகலம் அடைந்தனர்.

2-வது சீசன்

நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலை மற்றும் இயற்கை வளம் மிகுந்த வனப்பகுதிகளை கண்டு ரசிக்க வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு ஏப்ரல், மே மாதங்களில் முதலாவது சீசனும், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் 2-வது சீசனும் நடைபெறுகிறது.

தற்போது நீலகிரி மாவட்டத்தில் 2-வது சீசன் தொடங்கியுள்ளது. மேலும் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை, மிலாது நபி விடுமுறை மற்றும் வார விடுமுறை என தொடர் விடுமுறை வந்ததால் ஊட்டியில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

லேசான மழை

அவர்கள் ஊட்டி தாவரவியல் பூங்காவில் 35 ஆயிரம் தொட்டிகளில் நடவு செய்யப்பட்ட 125 ரகங்களை சேர்ந்த 4 லட்சம் செடிகளில் பூத்துக்குலுங்கும் பல்வேறு வண்ண மலர்களை கண்டு ரசித்தனர். குறிப்பாக சந்திரயான் விண்கல மலர் அலங்காரம் சுற்றுலா பயணிகளை கவர்ந்தது.

பிரதான புல்வெளிக்கு செல்ல அனுமதி இல்லாததால் சிறிய புல்வெளி மைதானத்தில் அமர்ந்தும், நடந்தும் ஊட்டியின் இதமான காலநிலையை அனுபவித்தனர். அப்போது விட்டு விட்டு லேசான மழை பெய்ததால் குதூகலம் அடைந்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

இது தவிர ஊட்டி ஏரியில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். குறிப்பாக மோட்டார் படகுகளில் செல்ல ஆர்வம் காட்டினர். மேலும் மலைரெயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்ததை காண முடிந்தது. இதேபோன்று நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்தது.

இதற்கிடையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் ஊட்டி நகர் முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கலெக்டர் அலுவலகம், சேரிங் கிராஸ், தாவரவியல் பூங்கா பகுதிகளில் சாலையில் நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.


Next Story