தொடர் விடுமுறையையொட்டி மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்


தொடர் விடுமுறையையொட்டி மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

தொடர் விடுமுறையையொட்டி மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

செங்கல்பட்டு

சுற்றுலா பயணிகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் நகரம் சர்வதேச அளவில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதன நகரமாக திகழ்கிறது. இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் வருகின்றன. ஆயிரக்கணக்கான வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் வந்து செல்கின்றனர்.

தற்போது பள்ளி தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை, தமிழ் புத்தாண்டு மற்றும் சனி, ஞாயிறு என தொடர் விடுமுறை காரணமாக மாமல்லபுரத்துக்கு சுற்றுலா பயணிகள் வருகை நேற்று அதிகம் காணப்பட்டது.

சுற்றுலா பயணிகளின் கூட்டத்தால் கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை ஆகிய புராதன பகுதிகள் சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. புராதன சின்னங்கள் முன்பு பலர் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்ததனர். பலர் கடலில் குதூகலமாக குளித்தனர்.

போக்குவரத்து நெரிசல்

நேற்று சுற்றுலா பயணிகள் வருகை அதிகமிருந்ததால் சுற்றுலா வாகனங்களால் மாமல்லபுரத்தில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. கிழக்கு ராஜ வீதி, மேற்கு ராஜ வீதி, கடற்கரை சாலை பகுதியில் கடும் நெரிசலில் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மெதுவாக ஊர்ந்து சென்றன.

இதனால் சாலையில் சென்ற வாகனங்கள் நெரிசலில் சிக்கிவிடாமல் இருக்க மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் தலைமையில் போக்குவரத்து போலீசார் வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இதற்கிடையில் சுற்றுலா வந்த பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய பஸ்கள் இயக்கப்படாததால் மாமல்லபுரம் பஸ் நிலையத்தில் சுற்றுலா பயணிகள், பஸ்சுக்காக நீண்டநேரம் காத்திருந்தனர்.

தற்போது கோடை காலத்தை முன்னிட்டு உள்நாட்டு பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கக் கூடும் என்பதால் கோடை காலங்களில் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக மாமல்லபுரத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு கூடுதல் அரசு பஸ்கள் இயக்க வேண்டும் என்று சுற்றுலா வழிகாட்டிகள், பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.


Next Story