டிராக்டர்-லாரி நேருக்கு நேர் மோதல்


டிராக்டர்-லாரி நேருக்கு நேர் மோதல்
x

ராமநத்தம் அருகே டிராக்டர்-லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

கடலூர்

ராமநத்தம்,

பெண்ணாடம் அருகே முருகன்குடியில் இருந்து கரும்பு ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று பெரம்பலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. டிராக்டரை துறையூரை சேர்ந்த இளங்கோவன் (வயது 58) என்பவர் ஓட்டினார். ராமநத்தம் அருகே பாளையம் மாரியம்மன் கோவில் அருகே வந்தபோது, எதிரே பெரம்பலூர் மாவட்டம் பேரளி கிராமத்தை சேர்ந்த ரெங்கசாமி (42) என்பவர் ஓட்டிச்சென்ற லாரி வந்தது. இதில் கண் இமைக்கும் நேரத்தில் டிராக்டரும், லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் லாரியின் இடிபாடுகளில் ரெங்கசாமி சிக்கி படுகாயம் அடைந்தார். இது குறித்த தகவலின் பேரில் ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயணைப்பு துறையினர் மூலம் சுமார் 30 நிமிடத்துக்கு மேலாக போராடி ரெங்கசாமியை மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் ராமநத்தம்-திட்டக்குடி சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு காவியா தலைமையிலான போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த விபத்து குறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story