கோவை, திருச்சி, ஓசூர், மதுரையில் வர்த்தகம், ஏற்றுமதி தகவல் மையங்கள் - அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்


கோவை, திருச்சி, ஓசூர், மதுரையில் வர்த்தகம், ஏற்றுமதி தகவல் மையங்கள் - அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்
x

கோவை, திருச்சி, ஓசூர், மதுரை ஆகிய 4 இடங்களில் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி தகவல் மையங்கள் அமைக்க ரூ.16 கோடியே 69 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசினார்.

சென்னை

கலந்தாய்வு கூட்டம்

சென்னையில் பன்னாட்டு வர்த்தக நிதி சேவை தளம் குறித்த குழுக் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். 5 மாவட்ட தொழில்மைய களப்பணி அலுவலர்களுக்கு புதிய இருசக்கர வாகனங்களை அவர் வழங்கினார்.

அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:-

நாட்டின் குறு, சிறு நடுத்தர தொழில்துறையில் தமிழகத்தின் பங்களிப்பு 9.25 சதவீதமாக உள்ளது. இந்தியாவிலேயே 3-வது பெரிய ஏற்றுமதி மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. இந்த சாதனைகளுக்கு உறுதுணையாக உள்ள பெரும் தொழிற்சாலைகளுக்கு அடித்தளமாக அமைந்துள்ளது குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில்கள்தான்.

திருச்சி-மதுரை

தமிழ்நாட்டில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் 10 இடங்களில் உள்ள ஏற்றுமதி மையங்களை மேம்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், குறு, சிறு நடுத்தர நிறுவனங்களுக்கு ஏற்றுமதி குறித்த ஆலோசனைகளையும், உதவிகளையும் வழங்க கோயம்புத்தூர், திருச்சி, ஓசூர், மதுரை ஆகிய 4 இடங்களில் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி தகவல் மையங்கள் அமைக்க ரூ.16 கோடியே 69 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதி மேம்பாட்டு மையங்கள்

ஏற்றுமதி சார்ந்த குறு, சிறு தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கவும், ஆலோசனை, உதவிகள் வழங்கவும் அனைத்து மாவட்ட தொழில் மையங்களிலும் ஏற்றுமதி மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

குறு, சிறு நிறுவனங்கள், பெருந்தொழில் நிறுவனங்களுக்கு வழங்கிய பொருட்கள், சேவைகளுக்கு உரிய தொகையை பெறுவதில் ஏற்படும் காலதாமதத்துக்கு தீர்வுகாண சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய 4 மண்டலங்களில் வசதியாக்க மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளர் அருண் ராய், தொழில் வணிகத்துறை கமிஷனர் சிஜிதாமஸ் வைத்யன், வெளிநாட்டு வர்த்தக இயக்குனகரத்தின் கூடுதல் இயக்குனர் ராஜலட்சுமி தேவராஜ், ஆர்.எஸ்.ஐ.எல். நிறுவன மேலாண்மை இயக்குனர் கேத்தன் கெய்க்வாட் மற்றும் தலைமை நிதி அலுவலர் கைலாஷ் குமார் வரோடியா, ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர் கூட்டமைப்பின் மண்டல தலைவர் அபீப் உசேன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story