நகராட்சி அதிகாரிகளை கண்டித்து வியாபாரிகள் தர்ணா போராட்டம்


நகராட்சி அதிகாரிகளை கண்டித்து வியாபாரிகள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 9 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-10T00:16:32+05:30)

ஊட்டியில் வாடகை செலுத்தாததால் கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டதை தொடர்ந்து, நகராட்சி அதிகாரிகளை கண்டித்து வியாபாரிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் ஒருவர், தீக்குளிக்க போவதாக மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி

ஊட்டி

ஊட்டியில் வாடகை செலுத்தாததால் கடைக்கு 'சீல்' வைக்கப்பட்டதை தொடர்ந்து, நகராட்சி அதிகாரிகளை கண்டித்து வியாபாரிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் ஒருவர், தீக்குளிக்க போவதாக மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாடகை பிரச்சினை

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டின் உள் மற்றும் வெளிப்புற பகுதியில் மொத்தம் 1,587 கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு கடந்த 1.7.2016 அன்று முதல் வாடகை மறு நிர்ணயம் செய்து உயர்த்தப்பட்டது. ஆனால் உயர்த்திய வாடகையை வியாபாரிகள் முறையாக செலுத்தாமல் வந்ததாக கூறப்படுகிறது. பல கட்ட பேச்சுவார்த்தைகளில் நிலுவை வாடகையை செலுத்துவதாக உறுதியளித்தும், வியாபாரிகள் முழுமையாக செலுத்தாமல் இருந்து வந்தனர்.

மொத்தம் 4 ஆண்டுகளாக நிலுவை வாடகையான ரூ.40 கோடியை செலுத்தாததால் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 757 கடைகளுக்கு சீல் வைத்து நகராட்சியால் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. சீல் வைத்த கடை வியாபாரிகளில் ஒரு சிலர் முழு தொகையையும், ஒரு சிலர் பாதித்தொகையையும் செலுத்தியதை தொடர்ந்து சீல்கள் அகற்றப்பட்டன.

தீக்குளிக்க போவதாக மிரட்டல்

இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் நடந்த பேச்சுவார்த்தையின்படி மார்ச் மாதத்திற்குள் நிலுவை வாடகையை செலுத்துவதாக வியாபாரிகள் உறுதியளித்திருந்தனர். ஆனாலும் வாடகை செலுத்தாத கடைகள் கணக்கெடுக்கப்பட்டு, நோட்டீஸ் வழங்கப்பட்டு, சீல் வைக்கும் பணிகள் நடந்து வந்தன.

அதில் நகராட்சி மார்க்கெட்டில் மளிகை கடை வைத்துள்ள குணசேகரன் என்பவரது கடைக்கும் சீல் வைக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அவர், நிலுவை வாடகை முழுவதையும் செலுத்தி விட்டேன், ஆனாலும் கடையின் பரப்பளவை நகராட்சி அதிகாரிகள் கூட்டி காண்பித்து தற்போது கூடுதல் வாடகை கேட்கின்றனர், எனவே தீக்குளிக்க போகிறேன் என்றுக்கூறி நேற்று தர்ணாவில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக சக வியாபாரிகளும் தர்ணா போராட்டத்தில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் ,போலீஸ் இன்ஸ்பெக்டர் மணி குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் காந்தி ராஜன் கூறுகையில், ரூ.44 கோடி வாடகை இருந்த நிலையில் ரூ.20 கோடி வசூல் ஆகி உள்ளது. இன்னும் ரூ.24 கோடி வசூலாகவில்லை. அதனால் வேறு வழி இல்லாமல் வரி வசூல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளோம் என்றார்.


Next Story