குப்பை வரியை குறைத்து வசூலிக்க வலியுறுத்தி ஆரணி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாபாரிகள் போராட்டம்


குப்பை வரியை குறைத்து வசூலிக்க வலியுறுத்தி ஆரணி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாபாரிகள் போராட்டம்
x

குப்பை வரியை குறைத்து வசூலிக்க வலியுறுத்தி ஆரணி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை, செங்குன்றம் உள்ளிட்ட பேரூராட்சிகளில் ஆண்டுக்கு ரூ.1,200 குப்பை வரி வசூலிக்கப்படுகிறது. ஆனால், ஆரணி பேரூராட்சியில் ஆண்டுக்கு ரூ.1,800 வசூலிப்பதாக கூறப்படுகிறது. இதனால் வியாபாரிகள் குப்பை வரியை குறைத்து வசூலிக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து பேரூராட்சி மன்ற செயல் அலுவலர், கலெக்டர், முதல்-அமைச்சர் உள்ளிட்ட பலதரப்பட்டோருக்கும் கோரிக்கை மனுவை வியாபாரிகள் சங்கம் சார்பாக வழங்கியும் பயன் இல்லை என்று கூறப்படுகிறது.

ஆரணி பேரூராட்சியில் குப்பை வரி சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவைகளை பேரூராட்சி அலுவலக ஊழியர்கள் பெற மறுப்பதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் ஆரணி பேரூராட்சி மன்றத்தின் சார்பில் திடீரென வியாபாரிகள் வரி செலுத்த மறுப்பதை போல வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த வியாபாரிகள் ஒன்று கூடி நேற்று ஆரணி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

மேலும், பேரூராட்சி தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குப்பை வரியை மற்ற பேரூராட்சிகளில் வசூலிப்பதை போன்று ஆண்டுக்கு ரூ.1,200 செலுத்த நாங்கள் தயாராக உள்ளோம். ஆண்டுக்கு ரூ.1,800 செலுத்த வேண்டும் என்று கூறினால் இதை கண்டித்து வருகிற 2-ந்தேதி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் ஆரணியில் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் கூறிவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும், ஆரணி போலீஸ் நிலையத்திலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த தலைவர் மகாவீர், செயலாளர் சங்கர், பொருளாளர் மகேந்தர் மற்றும் சங்க உறுப்பினர்கள், வியாபாரிகள் மனு அளித்தனர்.

தங்களின் கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் வருகிற 2-ந்தேதி முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறி விட்டு கலைந்து சென்றனர். இதனால் ஆரணியில் சுமார் 2 மணி நேரம் பதற்றமும், பரபரப்பும் நிலவியது.


Next Story