சாக்கடை நீர் வெளியேறியதால் வியாபாரிகள் திடீர் மறியல்
மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் சாக்கடை நீர் வெளியேறியதால் வியாபாரிகள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு வாசல் அம்மன் சன்னதி எதிரே கிழக்கு சித்திரை வீதி பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி ஓடியது. நேற்று விநாயகர் சதுர்த்திையயொட்டி கோவிலுக்கு வந்த பக்தர்கள் இதனால் பெரிதும் அவதிப்பட்டனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கடை முன்பு சாக்கடை நீர் தேங்கி இருந்ததால் துர்நாற்றம் வீசியது. இது குறித்து அந்த பகுதி கடைக்காரர்கள், பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நேற்று மதியம் அம்மன் சன்னதி கடைக்காரர்கள் திடீரென்று கீழஆவணிமூலவீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். அவர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்தனர். அவர்கள் சாக்கடை நீர் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.