பள்ளத்தில் இறங்கிய சரக்கு லாரியால் போக்குவரத்து பாதிப்பு


பள்ளத்தில் இறங்கிய சரக்கு லாரியால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 2 July 2023 4:49 PM GMT (Updated: 3 July 2023 8:39 AM GMT)

கணியூர் அருகே பள்ளத்தில் இறங்கிய சரக்கு லாரியால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திருப்பூர்

பள்ளத்தில் இறங்கிய லாரி

மடத்துக்குளத்தை அடுத்த கணியூரிலிருந்து கடத்தூர் செல்லும் சாலை மிக முக்கிய சாலையாக உள்ளது. இந்த வழியாக திண்டுக்கல் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.

இதுதவிர விவசாயப் பயன்பாட்டுக்கான வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் வாகனங்களும் இந்த சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர். எனவே இந்த சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

சாலை விரிவாக்கம்

அதனடிப்படையில் தற்போது ரூ.2 கோடியே 68 லட்சம் செலவில் சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகிறது.

பணிகள் ஒருபுறம் நடைபெறும் நிலையிலும் மறுபுறம் போக்குவரத்து தொடர்ந்து கொண்டுள்ளது. இதனால் எதிரெதிரே கனரக வாகனங்கள் வரும்போது சாலையோர பள்ளத்தில் சிக்கிக் கொள்ளும் நிலை உள்ளது.

அந்தவகையில் தேங்காய் மட்டை பார் ஏற்றி வந்த லாரி ஒன்று சாலையோர பள்ளத்தில் இறங்கிய சிக்கியது. இதனால் மற்ற கனரக வாகனங்கள் அந்த பகுதியை கடக்க முடியாத நிலை ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பொக்லைன் எந்திரம் உதவியுடன் லாரி மீட்கப்பட்டது.

இதையடுத்து சில மணி நேரங்களுக்குப் பிறகு போக்குவரத்து சீரானது. சாலைப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.


Next Story