சென்னை சைதாப்பேட்டையில் பரிதாபம்: கட்டிட சுவர் இடிந்து விழுந்து பெண் பலி? 3 வயது சிறுமி மூளைச்சாவு


சென்னை சைதாப்பேட்டையில் பரிதாபம்: கட்டிட சுவர் இடிந்து விழுந்து பெண் பலி? 3 வயது சிறுமி மூளைச்சாவு
x

சென்னை சைதாப்பேட்டையில் பக்கத்து கட்டிட சுவர் இடிந்து விழுந்து பெண் பரிதாபமாக இறந்து போனதாக கூறப்படுகிறது. 3 வயது சிறுமி உயிருக்கு போராடிய நிலையில், கைக்குழந்தை அதிசயமாக உயிர் தப்பியது.

சென்னை

சென்னை சைதாப்பேட்டையில் புயல்-மழையில் சிக்கி ஒரு குடும்பமே சின்னா பின்னமாகி விட்டது. சைதாப்பேட்டை நெருப்பு மேட்டில் அந்த குடும்பம் வசித்தது. அந்த குடும்பத்தின் தலைவர் பெயர் கேசவேல் (வயது 38). மாற்றுத்திறனாளி. இவர் சைக்கிள் கடை வைத்து பிழைப்பு நடத்தி வந்தார்.

இவரது மனைவி பெயர் லட்சுமி. இவர்களுக்கு 3 வயதில் கிருத்திகா என்ற பெண் குழந்தையும், 6 மாத கைக்குழந்தையும் இருந்தது. ஏழ்மையான இந்த குடும்பம் வாழ்ந்த வீடு ஓட்டு வீடு ஆகும். இவர்கள் வசித்த வீட்டுக்கு அருகில் 2 மாடியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு கேசவேல் மனைவி, குழந்தைகளுடன் தூங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவில் புயல் மழை காரணமாக, பக்கத்தில் கட்டப்பட்டு வந்த புதிய கட்டிடத்தின் சுவர், கேசவேலின் ஓட்டு வீடு மீது விழுந்து விட்டது. இதில் கேசவேல் வீடு பலத்த சேதம் அடைந்து இடிந்தது.

இடிபாடுகளில் கேசவேல் குடும்பமே சிக்கியது. அவரது மனைவி லட்சுமி, 3 வயது சிறுமி கிருத்திகா இருவரும் உடல் நசுங்கி பலத்த காயம் அடைந்தனர். 6 மாத கைக்குழந்தை அதிசயமாக காயம் ஏதும் இல்லாமல் உயிர் தப்பியது. கேசவேலுவும் லேசான காயத்துடன் தப்பினார். லட்சுமியும், கிருத்திகாவும் மூளைச்சாவு ஏற்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

லட்சுமி நேற்று பகலில் இறந்து விட்டதாக கூறப்பட்டது. ஆனால் லட்சுமி உயிர் இழப்பு பற்றி டாக்டர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். குழந்தை கிருத்திகா மேல் சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள். தாய் லட்சுமி இல்லாத விவரம் தெரியாத 6 மாத கைக்குழந்தை தாய்பாலுக்காக கதறி அழுதது. அக்கம்பக்கத்து வீட்டு பெண்கள் அந்த குழந்தைக்கு புட்டி பால் கொடுத்து தேற்றினார்கள். இந்த பரிதாப சம்பவம் சைதாப்பேட்டையில் நேற்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story