தாம்பரம் அருகே பரிதாபம்: வீட்டை 'ஜாக்கி'கள் வைத்து உயர்த்தியபோது சுவர் இடிந்து தொழிலாளி சாவு - 2 பேர் காயம்


தாம்பரம் அருகே பரிதாபம்: வீட்டை ஜாக்கிகள் வைத்து உயர்த்தியபோது சுவர் இடிந்து தொழிலாளி சாவு - 2 பேர் காயம்
x

தாம்பரம் அருகே வீட்டை ‘ஜாக்கி’கள் வைத்து உயர்த்தியபோது சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். மேலும் 2 பேர் காயம் அடைந்தனர்.

சென்னை

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் கர்ணம் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி (வயது 60). இவருக்கு சொந்தமாக 2 மாடி வீடு உள்ளது. பழமையான இந்த வீடு, சாலையின் அளவுக்கும் தாழ்வாக இருப்பதால் மழைநீர் அடிக்கடி வீட்டுக்குள் புகுந்து சிரமம் அடைந்து வந்தார்.

இதனால் வீட்டை இடிக்காமல் 'ஜாக்கி'கள் மூலம் 2 மாடி வீட்டை தரைத்தளத்தில் இருந்து உயர்த்த முடிவு செய்தார். அதன்படி 100 'ஜாக்கி'கள் மூலம் தரை பகுதியில் இருந்து வீட்டை உயர்த்தும் பணிகள் கடந்த 14-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கட்டிட மேஸ்திரிகள் சுந்தர்ராஜ் மற்றும் ஆரோன் மூலம் இந்த பணிகளை வடமாநில தொழிலாளர்கள் 11 பேர் செய்து வந்தனர்.

நேற்று காலை கட்டிடத்தை 'ஜாக்கி'கள் மூலம் உயர்த்தினர். அப்போது திடீரென முதல் மாடியில் உள்ள பக்கவாட்டு சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் அங்கு பணியில் ஈடுபட்டு வந்த 3 தொழிலாளர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள், அவர்களை மீட்க முயன்றனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் தாம்பரம், மேடவாக்கம் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 2 வாகனத்தில் வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் இந்த விபத்தில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த பேஸ்கார் (28) என்ற தொழிலாளி கட்டிட இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் ஓம்கார் (20) என்ற தொழிலாளிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மற்றொருவர் லேசான காயம் அடைந்தார். இவர்கள் இருவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

பலியான பேஸ்கார், கட்டிடத்தின் பக்கவாட்டில் உள்ள சிமெண்டு தடுப்பில் நின்று வேலை செய்து கொண்டிருந்தபோது சுவர் இடிந்து விழுந்தது. அப்போது கீழே விழுந்த அவரது மார்பு பகுதியில் கட்டிட இடிபாடு விழுந்து விட்டது. இதில் உயிருக்கு போராடிய அவரை மீட்க தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடினர். ஆனாலும் அவர் பரிதாபமாக இறந்துவிட்டார்.

கட்டிடம் முழுவதும் இடியாமல் ஒரு பகுதி சுவர் மட்டும் இடிந்து விழுந்ததால் மற்ற தொழிலாளர்கள் உயிர் தப்பினர் .இந்த சம்பவம் குறித்து சேலையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சேலையூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story