நவீன கரும்பு சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
மூங்கில்துறைப்பட்டு அருகே நவீன கரும்பு சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது.
மூங்கில்துறைப்பட்டு,
வேளாண்மைத்துறையின் அட்மாதிட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நீடித்த நவீன கரும்பு சாகுபடி குறித்த தொழில் நுட்ப பயிற்சி மூங்கில்துறைப்பட்டு அருகே அருளம்பாடியில் நடைபெற்றது. இதற்கு வாழவச்சனூர் அரசு வேளாண்மை கல்லூரி பேராசிரியரும், வேளாண் விஞ்ஞானியுமான அய்யாதுரை தலைமை தாங்கி கரும்பு பயிரிடும் முறைகள் பற்றியும், பின்னர் அறுவடை காலம் வரை அதனை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பது பற்றி விவசாயிகளிடம் விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மூங்கில்துறைப்பட்டு சர்க்கரை ஆலையின் கரும்பு பெருக்கு அலுவலர் சாந்தி கலந்து கொண்டு ஆலையில் பரிந்துரைக்கப்படும் கரும்பு ரகங்கள் பற்றியும், வேர்ப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் பற்றியும், தமிழக அரசின் மானிய திட்டங்கள், சிறுதானியத்தின் பயன்கள், இயற்கை விவசாயம் குறித்து வேளாண்மை துணை இயக்குனர் காசியும் விளக்கி பேசினார். மேலும் அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் மவிசுதா உழவன் செயலியின் பயன்பாடுகள் பற்றியும், கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் பற்றியும் பேசினார். இதில் அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் அருண்குமார், செல்வி, லோகபிரியா மற்றும் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு அலுவலர் ராகவன் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.