பாஸ்போர்ட் சரிபார்க்கும் போலீசாருக்கு பயிற்சி - சென்னையில் தொடங்கியது


பாஸ்போர்ட் சரிபார்க்கும் போலீசாருக்கு பயிற்சி - சென்னையில் தொடங்கியது
x

போலீசாருக்கு பாஸ்போர்ட் சரிபார்க்கும் பயிற்சி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தொடங்கியது.

சென்னை

சென்னை நுண்ணறிவுப்பிரிவு மற்றும் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு பாஸ்போர்ட் ஆவணங்கள் சரிபார்ப்பு, சட்ட விரோதமாக குடியேறியவர்களை கண்டறிதல் மற்றும் போலி பாஸ்போர்ட்டுகளை கண்டறிதல் குறித்து 2 நாட்கள் பயிற்சி வகுப்பு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. கூடுதல் போலீஸ் கமிஷனர் (குற்றப்பிரிவு) சி.மகேஸ்வரி தலைமை தாங்கினார்.

சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.கோவேந்தன், பயிற்சியை தொடங்கி வைத்து பேசும்போது, 'பாஸ்போர்ட் சரிபார்ப்பு பணியை சரியாக செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. பாஸ்போர்ட் சேவைகளை வழங்குவதில் போலீஸ் சரிபார்ப்பு செயல்முறைக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்' என்றார்.

பயிற்சி வகுப்பில், இந்திய குடியுரிமை பெறுவதற்கான நடைமுறைகள், இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட காலத்தை விட அதிக காலம் தங்கியிருக்கும் சட்டவிரோத புலம் பெயர்ந்தோரை கண்டுபிடித்தல் மற்றும் அவர்களை நாடு கடத்தும் நடைமுறைகள் மற்றும் ஆவணங்களை சரிபார்த்தல், பாஸ்போர்ட் விண்ணப்பித்தவர்களின் ஆவணங்களை போலீசார் சரிபார்த்து அறிக்கைகள் தயார் செய்யும் நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள், போலீசார் மற்றும் பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட வேண்டிய பதிவுகள், போலி பாஸ்போர்ட்டுகளை கண்டறிதல், வெளிநாட்டினர் சட்டம் மற்றும் பாஸ்போர்ட் சட்டங்கள் குறித்தும் எடுத்துக்கூறப்பட்டது.

முதல் நாள் பயிற்சி வகுப்பில் சென்னை மாநகரில் பாஸ்போர்ட் சரிபார்ப்பு பணியில் ஈடுபடும் 160-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர். உயர் போலீஸ் அதிகாரி அருண் சக்திகுமார் மற்றும் பாஸ்போர்ட் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story