இளம் விஞ்ஞானிகளுக்கு பயிற்சி

போடி ஏலக்காய் விவசாயிகள் சங்க கல்லூரியில் இளம் விஞ்ஞானிகளுக்கு பயிற்சி முகாம் தொடங்கியது.
போடி (மீனாட்சிபுரம்):
போடி ஏலக்காய் விவசாயிகள் சங்க கல்லூரி மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் சார்பில் இளம் விஞ்ஞானிகளாக தேர்வு செய்யப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி முகாம் தொடக்க விழா, கல்லூரி வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்கு கல்லூரி தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். திட்ட ஒருங்கிணைப்பாளரும், தாவரவியல் துறை தலைவருமான கோபி பயிற்சி முகாமின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்ற உறுப்பினர் சீனிவாசன் பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார்.
இதில், சிறப்பு விருந்தினராக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உயிரியல், அறிவியல் நெட்வொர்க்கிங் வள மையத்தின் ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கல்லூரியின் துணை தலைவர் ராமநாதன், செயலாளர் புருஷோத்தமன், கல்லூரி துணை முதல்வர் பாலமுருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கல்லூரி முதல்வர் சிவகுமார் வரவேற்றார். முடிவில் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் முருகேசன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை இளம் மாணவ விஞ்ஞானி பயிற்சி முகாம் இணை ஒருங்கிணைப்பாளர்கள், ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் மற்றும் பயிற்சி முகாம் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
இந்த பயிற்சி முகாம் 15 நாட்கள் நடைபெற உள்ளது. இதில், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து இளம் விஞ்ஞானிகளாக தேர்வு செய்யப்பட்ட 9-ம் வகுப்பு பயிலும் 78 மாணவ-மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.