அவதூறாக பேசியதால் வக்கீலை தாக்கிய திருநங்கைகள் - ராமநாதபுரத்தில் பரபரப்பு


அவதூறாக பேசியதால் வக்கீலை தாக்கிய திருநங்கைகள் - ராமநாதபுரத்தில் பரபரப்பு
x

ராமநாதபுரத்தில் வக்கீல் ஒருவர் திருநங்கைகள் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் முழுமையான வாக்குப்பதிவு நடைபெற மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று ராமநாதபுரம் சமூக நலத்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு மாவட்டம் முழுவதும் உள்ள திருநங்கைகளை அழைத்துள்ளனர்.

அதிகாரிகள் தெரிவித்தபடி ஆதார் கார்டு, உறுப்பினர் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட சான்றுகளுடன் திருநங்கைகள் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னர் திருநங்கைகள் கலெக்டர் அலுவலக வளாக பகுதியில் ஆங்காங்கே அமர்ந்து பேசி கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த வக்கீல் ஒருவர் திருநங்கைகள் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த திருநங்கைகள் வக்கீலை சரமாரியாக விரட்டி விரட்டி தாக்கினர். மேலும் கைகளை தட்டி அவரை கண்டித்து திருநங்கைகள் கோஷமிட்டனர். இதனையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வழக்கறிஞர் தர்மரை மீட்டு பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து அறிந்த கலெக்டர் விஷ்ணு சந்திரன் திருநங்கைகளை நேரில் அழைத்து விசாரித்தார். மேலும் இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் கூறினார். இதற்கிடையே காயமடைந்த வக்கீல் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


Next Story