குமரி மலை கிராமங்களுக்கு2-வது நாளாக போக்குவரத்து துண்டிப்பு


குமரி மலை கிராமங்களுக்கு2-வது நாளாக போக்குவரத்து துண்டிப்பு
x

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரை பாலங்கள் மூழ்கியதால் மலை கிராமங்களுக்கு 2-வது நாளாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் மரம் விழுந்து வீடுகள் சேதமடைந்தன.

கன்னியாகுமரி

குலசேகரம்,

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரை பாலங்கள் மூழ்கியதால் மலை கிராமங்களுக்கு 2-வது நாளாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் மரம் விழுந்து வீடுகள் சேதமடைந்தன.

தரை பாலங்கள் மூழ்கின

குமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மழை தீவிரமாக பெய்து வருகிறது. மலையோர பகுதிகளில் பெய்த மழையால் ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் ஓடியதால் நேற்று முன்தினம் மோதிரமலை உள்ளிட்ட இடங்களில் தரை பாலங்கள் மூழ்கின. இதனால் 10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இந்தநிலையில் நேற்று அணைப்பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் விடிய, விடிய மழை பெய்தது. இதனால் மலை கிராமங்களுக்குச் செல்லும் தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கிய நிலையில் காணப்பட்டது. மோதிரமலை-குற்றியாறு, மோதிரமலை-கோலிஞ்சி மடம், மோதிரமலை- வேலிபிப்பிலாம், குற்றியாறு-கிளவியாறு உள்ளிட்ட வழித்தடங்களில் உள்ள மலை கிராமங்களுக்கு நேற்று 2-வது நாளாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஸ்கள் பாதியில் திரும்பின

குலசேகரத்தில் இருந்து குற்றியாறு மற்றும் கிளவியாறுக்குச் செல்லும் அரசு பஸ்கள் மோதிரமலை சந்திப்பு வரை சென்று திரும்பின.

மழையினால் திற்பரப்பு அருகே முக்குரோடு பகுதியில் குசேலன் என்பவரது வீட்டின் அருகில் நின்ற அயனிமரம் வீட்டின் மீது சாய்ந்து விழுந்தது. இதில் வீட்டின்சுவர் சேதமடைந்தது. மேலும் மரக்கிளை விழுந்து அவரது வீட்டின் அருகில் உள்ள டேவிட் ராஜின் வீட்டின் ஆஸ்பெக்டாஸ் கூரை சேதமடைந்தது. இதில் அவரது மகனுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

வெள்ள அபாய எச்சரிக்கை

சிற்றாறு அணைகளின் நீர்மட்டம் வெள்ள அபாய அளவான 12 அடியைக் கடந்துள்ளன. பொதுவாக அணைகளின் நீர்மட்டம் அவற்றின் உச்சபட்ச அளவிற்கு 6 அடிக்கு முன்னதாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுவது வழக்கம். அந்த வகையில் சிற்றாறு அணைகளின் நீர்மட்டம் 12 அடியைக் கடந்துள்ளன.

இதையடுத்து சிற்றாறு அணையின் மறுகால் வழியாக தண்ணீர் வெளியேறும் கோதையாறு மற்றும் தாமிரபரணியாற்றுப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி பொதுப்பணித்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

மரம் விழுந்தது

திருவட்டார் அருகே உள்ள செங்கோடியில் முட்டத்துறை மகாதேவர் கோவில் வளாகத்தில் நின்ற கல் ஆலம் மரம் நேற்று வேருடன் பெயர்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதில் கோவில் பெயர் பலகை, ஒரு மின் கம்பம் ஆகியன சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக மரம் விழுந்த போது அந்த பகுதியில் ஆட்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. ெதாடர்ந்து அறநிலையத் துறையினர், கோவில் நிர்வாகத்தினர், பொதுமக்கள் இணைந்து மரத்தை வெட்டி அகற்றினர். இந்த சம்பவத்தால் செங்கோடி - கல்லன்குழி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story