10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு


10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு
x

ஏற்காட்டில் பெய்த கனமழையால் 10 கிராமங்களுக்கு செல்ல வழியின்றி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

சேலம்

ஏற்காடு:-

ஏற்காட்டில் பெய்த கனமழையால் 10 கிராமங்களுக்கு செல்ல வழியின்றி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து துண்டிப்பு

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை முதல் ஏற்காட்டில் வானம் கருமேகங்கள் சூழ்ந்து இருந்தது. இதையடுத்து தூறலாக தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல கனமழையாக கொட்ட தொடங்கியது. இந்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் இருசக்கர வாகனங்களை ஓட்டிச்சென்றவர்கள் அவதியடைந்தனர்.

இந்த நிலையில் ஏற்காட்டில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாகலூர் கிராமத்தில் மரப்பாலம் என்ற பகுதியில் சிறிய ஓடை ஒன்று உள்ளது. இந்த ஓடைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. அதன்படி நாகலூர், முளுவி, சுரைக்காப்பட்டி, கொளகூர், ஜே.ஜே.நகர், எஸ்.டி.நகர்., மஞ்சவாடி உள்பட 10 கிராமங்களுக்கு செல்ல வழியின்றி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மேலும் நாகலூர் பகுதியில் காட்டாற்று வெள்ளத்தால் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. சாலையில் கற்கள் மற்றும் மரக்கிளைகள் மழைநீரில் அடித்து சாலையில் சென்றதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மழையின் காரணமாக கட்டிட வேலைகள் மற்றும் காபி தோட்ட வேலைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் வீடுகளிலேயே முடங்கினர்.


Next Story