மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; தொழிலாளி பலி

விக்கிரவாண்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரவாண்டி,
விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே அனுமந்தபுரத்தை சேர்ந்தவர்கள் குரு (வயது 35), தீர்த்தமலை (40). இவர்கள் 2 பேரும் சிறுவள்ளிக்குப்பம் கிராமம் அருகே உள்ள செங்கல் சூலையில் கூலி வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் அனுமந்தபுரத்தை சேர்ந்த உறவினர் ஒருவரின் இல்ல நிகழ்ச்சிக்கு 2 பேரும் சென்றனர்.
பின்னர் அவர்கள் அ்ங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தாங்கள் வேலை பார்க்கும் சிறுவள்ளிக்குப்பம் கிராமத்திற்கு புறப்பட்டனர். பனையபுரம் பகுதியில் சென்றபோது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
போலீசார் விசாரணை
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர்கள் 2 பேரும் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி குரு பரிதாபமாக இறந்தார். தீர்த்தமலை தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






