ரூ.2 லட்சம் பர்னிச்சர் பொருட்களுடன் சரக்கு வாகனம் கடத்தல்


ரூ.2 லட்சம் பர்னிச்சர் பொருட்களுடன் சரக்கு வாகனம் கடத்தல்
x

சென்னையில் இருந்து சிவகங்கைக்கு ரூ.2 லட்சம் பர்னிச்சர் பொருட்களுடன் சரக்கு வாகனத்தை கடத்திய வாலிபரை, போலீசார் சினிமா பாணியில் 15 கி.மீ. தூரம் துரத்திச் சென்று மடக்கி பிடித்தனர்.

கடலூர்

ராமநத்தம்,

கடலூர் மாவட்டம் ராமநத்தம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னை போரூரில் இருந்து பர்னிச்சர் மற்றும் லாக்கர் பொருட்களை சரக்கு வாகனத்தில் மர்மநபர்கள் கடத்தி வருவதாக, கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மூலம் ராமநத்தம் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் போலீசார் ஆவட்டி கூட்டுரோட்டில் நின்று அவ்வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி தீவிர சோதனை மேற்கொண்டனர். அந்த சமயத்தில் அங்கு வந்த சரக்கு வாகனம் ஒன்று போலீசாரை கண்டதும் நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்றது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் ரோந்து வாகனத்தில், அந்த சரக்கு வாகனத்தை துரத்தி சென்றனர்.

விரட்டிச் சென்ற போலீசார்

சாலையில் சரக்கு வாகனமும், போலீஸ் வாகனமும் ஒன்றன்பின் ஒன்றாக மின்னல் வேகத்தில் சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்த சாலையோரம் நின்ற பொதுமக்கள் சிதறி ஓடினர். சுமார் 15 கி.மீட்டர் தூரம் விரட்டிச் சென்று ராமநத்தம் வெள்ளாற்று பாலம் அருகே அந்த வாகனத்தை போலீசார் மடக்கி பிடித்தனர்.

இதையடுத்து சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், சிவகங்கை மாவட்டம் பொன்அமராவதி அருகே உள்ள கரிமச்சம்பட்டியை சேர்ந்த கணேசன் மகன் மணிகண்டன் (வயது 32) என்பதும், சென்னை போரூரில் உள்ள தனியார் பர்னிச்சர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும், நேற்று முன்தினம் இரவு அந்த நிறுவனம் முன்பு பர்னிச்சர் பொருட்களுடன் நின்ற சரக்கு வாகனத்தை கடத்திக்கொண்டு சொந்த ஊருக்கு செல்ல முயன்றதும் தெரியவந்தது.

ஜி.பி.எஸ். கருவியால் சிக்கினார்

தொடர்ந்து நடத்திய விசாரணையில் மணிகண்டன் போரூரில் இருந்து புறப்பட்டு சுமார் 20 கி.மீ. தூரம் வந்ததும் சரக்கு வாகனத்தில் டீசல் இல்லாமல் நடுரோட்டில் நின்றது. உடனே அவர் சரக்கு வாகனத்தில் இருந்த பர்னிச்சர் பொருட்களை ரூ.1900-க்கு விற்பனை செய்துள்ளார்.

பின்னர் அந்த பணத்தில் சரக்கு வாகனத்தில் டீசல் நிரப்பிக் கொண்டு சிவகங்கை நோக்கி சென்றுள்ளார். ஆனால் அந்த சரக்கு வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த ஜி.பி.எஸ் கருவி மூலம் போலீசில் சிக்கிக் கொண்டது தெரியவந்தது.

ரூ.2 லட்சம்

இதையடுத்து ரூ.2 லட்சம் மதிப்பிலான பர்னிச்சர் பொருட்களுடன் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், மணிகண்டனை ராமநத்தம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஜெய்கீர்த்தி தலைமையிலான போலீசார், மணிகண்டனிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

பர்னிச்சர் பொருட்களுடன் சரக்கு வாகனம் கடத்திய வாலிபரை சினிமா பாணியில் 15 கி.மீ. தூரம் துரத்திச் சென்று போலீசார் மடக்கி பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story