கோழிப்பண்ணையாளர்கள் 2-வது நாளாக போராட்டம் நடத்த முயற்சி
நாமக்கல்லில் 2-வது நாளாக கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த கோழிப்பண்ணையாளர்கள் முயன்றனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதன்பேரில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
2-வது நாளாக போராட்டம்
நாமக்கல்லில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தில் முட்டைக்கு குறைந்தபட்ச விலையை உறுதி செய்ய வேண்டும், இந்தியா முழுவதும் ஒற்றை சாளரல் முறையில் விலை மாற்றம் செய்ய பரிந்துரைக்க வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோழிப் பண்ணையாளர்கள் நேற்று முன்தினம் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த நாமக்கல் போலீசார் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது குழுவின் தலைவர் டாக்டர் செல்வராஜிடம் மனு அளிக்க வந்திருப்பதாகவும், அவர் வரும்வரை அமைதியாக அலுவலகத்தில் அமர்ந்து இருப்பதாகவும் கூறினர். பின்னர் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் பேச்சுவார்த்தை நடத்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் யாரும் வரவில்லை.
பேச்சுவார்த்தை
அதன் காரணமாக பண்ணையாளர்கள் சிலர் இரவில் அலுவலகத்திலேயே படுத்து உறங்கினர். பின்னர் நேற்று காலை மீண்டும் உள்ளிருப்பு போராட்டத்தை தொடர பண்ணையாளர்கள் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் மற்றும் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் துணைத் தலைவர் சிங்கராஜ் சம்பவ இடத்திற்கு சென்று கோழிப்பண்ணையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பண்ணையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவால் அறிவிக்கப்படும் முட்டை விலையில் இருந்து மைனஸ் என்ற முறையை நீக்கவும், தினந்தோறும் முட்டை விலையை அறிவிக்கவும், 2 அல்லது 5 பைசா வரை மட்டும் முட்டை விலையில் மாற்றம் செய்ய பரிந்துரைக்கவும் வலியுறுத்தப்பட்டது.
கருத்து கேட்பு கூட்டம்
இதுகுறித்து கோழிப்பண்ணையாளர்கள் மற்றும் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் விவாதிக்கும் வகையில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் அறிவுறுத்தினார். அதற்கு குழுவின் தலைவர் டாக்டர் செல்வராஜிடம் கலந்து பேசி, பண்ணையாளர்கள் கருத்தை கேட்க 15 நாட்களுக்குள் கருத்து கேட்பு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்வதாக துணைத் தலைவர் சிங்கராஜ் கூறினார். மேலும் கூட்டத்தில் எழும் பெரும்பான்மை கருத்தின் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அவற்றை நடைமுறைப்படுத்த மத்திய கமிட்டிக்கு பரிந்துரைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதையடுத்து பண்ணையாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.