எங்கள் குரலை முடக்கும் முயற்சி வெற்றி பெறாது- அண்ணாமலை
அண்ணாமலை மீது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
சென்னை,
போதைப்பொருள் விவகாரத்தில் அவதுறு பரப்புவதாக தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மீது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இந்தநிலையில் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவனான தி.மு.க. நிர்வாகி ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தல் கும்பல் பிடிபட்டு சுமார் ஒரு மாதம் ஆகிறது.
பிரதமர் நரேந்திரமோடி தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் குறித்துக் கவலை தெரிவித்திருக்கிறார். ஆனால் இது குறித்து ஒரு வார்த்தை இதுவரை பேசாத முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் தி.மு.க.ஆட்சிக்கு வந்த பிறகு அதிகரித்து விட்டது என்ற உண்மையைக் கூறியதற்காக என் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
முதல்-அமைச்சர் அவர்களே? மக்களுக்கு தி.மு.க. ஆட்சியின் அவலம் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக, அவதூறு வழக்கு தொடர்ந்து எங்கள் குரலை முடக்கும் முயற்சி வெற்றி பெறாது. தொடர்ந்து மக்கள் மத்தியில் உங்கள் அவல ஆட்சியை அம்பலப்படுத்திக்கொண்டு தான் இருப்போம்.
இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்