எடப்பாடி பழனிசாமி தரப்பு மீது டிடிவி தினகரன் கடும் விமர்சனம்..!!


எடப்பாடி பழனிசாமி தரப்பு மீது டிடிவி தினகரன் கடும் விமர்சனம்..!!
x

கோப்புப்படம்

எம்ஜிஆர், புரட்சித் தலைவி அம்மாவின் தொண்டர்களை ஏமாற்றும் துரோக சக்தியை தோலுரித்துக் காட்டுவோம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

எம்ஜிஆர், புரட்சித் தலைவி அம்மாவின் தொண்டர்களை ஏமாற்றும் துரோக சக்தியை மக்கள் மன்றத்தில் தோலுரித்துக் காட்டுவோம் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மைத் தொண்டர்களாம் கழக உடன்பிறப்புகளுக்கு... ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தலைமைத் தேர்தல் ஆணையத்தால் கழகத்திற்கு 'குக்கர்' சின்னம் வழங்கப்படாத நிலையில் இந்த மடலை உங்களுக்கு எழுதுகிறேன்.

இந்தியாவில் எந்த ஜனநாயக இயக்கமும் சந்திக்காத இன்னல்களையும், இடையூறுகளையும், முட்டுக்கட்டைகளையும் தாண்டிதான் ஐந்து ஆண்டுகளாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பயணித்து வருகிறது.

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கொள்கைகளை நெஞ்சில் ஏந்தி, தொடரும் இந்த லட்சியப் போராட்டத்தில் உங்கள் ஒவ்வொருவரின் துணையோடுதான் எதிர்வரும் அத்தனை தடைகளையும் தாண்டி வந்து கொண்டிருக்கிறோம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலும் அப்படித்தான்.

தேர்தல் அறிவித்தவுடன் வேட்பாளர் தேர்வில் தொடங்கி பிரச்சாரத்தை ஆரம்பித்தது வரை முழு வீச்சில் நாம் களமிறங்கினோம். தலைமைக் கழக நிர்வாகிகள் தொடங்கி இந்த இயக்கத்தின் கடைகோடி தொண்டர்கள் வரை வழக்கமான உற்சாகத்தோடும், உத்வேகத்தோடும் அடுத்த நாளே ஈரோட்டில் குவிந்தது நம் இயக்கத்திற்கே உரிய தனிச்சிறப்பு.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரால் தீய சக்தி என்று அடையாளம் காட்டப்பட்டு, தேர்தல் வாக்குறுதிகளைக்கூட நிறைவேற்ற மனமில்லாமல் மக்களை ஏமாற்றிவரும் தி.மு.க தலைமையிலான அணியையும், அம்மாவின் தொண்டர்களை தொடர்ந்து ஏமாற்றிவரும் துரோக சக்தியையும் மக்கள் மன்றத்தில் தோலுரித்துக் காட்டி முத்திரை பதிக்க வேண்டும் என்ற வேகத்தில் கடந்த ஒரு வாரமாக நீங்கள் காட்டிய ஆர்வமும், உழைப்பும் மெய் சிலிர்க்க வைத்தன.

அதற்காக என்னுடைய இதய நன்றிகளை உங்கள் ஒவ்வொருவருக்கும் காணிக்கையாக்குகிறேன். கன்னியாகுமரி முதல் திருத்தணி வரை தமிழகம் முழுவதும் இருந்து களம்காண வந்த என் அன்பு கழக உடன்பிறப்புகள் அனைவரும் பாதுகாப்பாக அவரவர் ஊர்களுக்கு சென்று சேர்ந்திட வேண்டுகிறேன்.

காலம் இப்படியே போய்விடாது; நாம் கம்பீரமாக எழுந்து நின்று, அம்மாவின் லட்சியங்களை நிறைவேற்றக்கூடிய நாள் வெகுதொலைவில் இல்லை. நெருங்கிவிட்ட நாடாளுமன்றத் தேர்தலில் நமக்கென தனி இடத்தை பிடிப்பதற்கு உழைப்பதற்கான பணிகளில் முழுக்கவனம் செலுத்திடுவோம். தலைமைக் கழக அலுவலகத்தில் விரைவில் கூடவுள்ள நிர்வாகிகள் கூட்டத்தில் சந்திப்போம். உறுதியாக நாளை நமதே" என்று அதில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.Next Story