தூத்துக்குடியை குற்றமில்லாத மாவட்டமாக மாற்ற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்


தூத்துக்குடியை குற்றமில்லாத மாவட்டமாக மாற்ற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்
x
தினத்தந்தி 23 Jun 2023 12:15 AM IST (Updated: 23 Jun 2023 1:23 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியை குற்றமில்லாத மாவட்டமாக மாற்ற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியை குற்றமில்லாத மாவட்டமாக மாற்ற பொதுமக்கள் போலீசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வேண்டுகோள் விடுத்தார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி சமூகசேவை சங்கம் சார்பில் தூத்துக்குடி பாத்திமாநகரில் போதை தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சமூகசேவை சங்க பங்குதந்தை அமலன் தலைமை தாங்கினார். பாத்திமாநகர் பங்குதந்தை ஜெயந்தன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கலந்து கொண்டு பேசினார்.

போதை பழக்கம்

அப்போது, தற்போது நடக்கும் பல குற்ற செயல்களில் சில, போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களால் நடக்கிறது. தற்காலங்களில் இளைஞர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாவதால் உடல் ஆரோக்கியம் கெட்டு சிறு வயதிலேயே உயிரிழக்கிறார்கள். உடல் ஆரோக்கியமாக இருந்தாலே மனமும் ஆரோக்கியமாக இருக்கும். நமது சிந்தனைகள் நேர்மையானதாக இருந்தாலே நாமும் நலமுடன் இருப்போம். குழந்தைகளை செல்போனில் விளையாடுவதை விட வெளியில் உங்களது கண்காணிப்பில் விளையாட அனுமதியுங்கள். அவ்வாறு விளையாட்டுகளில் ஈடுபட்டால் குழந்தைகள் உடல் ஆரோக்கியத்தோடு எந்த செயல்களிலும் முழு ஈடுபாட்டுடன் வெற்றி பெறுவார்கள். போதை பொருட்களை அளவுக்கு அதிகமாக உபயோகிப்பதால் இளம் வயதிலேயே உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. மாத்திரைகளும் ஊசிகளும் கசப்பாக இருந்தாலும், அதுதான் நோய் தீர்க்கும் மருந்தாகும்.

அதுபோல வாழ்க்கையில் உண்மையையும், நேர்மையும் கடைப்பிடித்தால் மட்டுமே வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ முடியும். குழந்தைகள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் சொல்லுக்கு கட்டுபட்டு நடந்தால் மட்டுமே வாழ்க்கையில் சிறப்பான இடத்தை அடைய முடியும்.

பொதுமக்கள் ஒத்துழைப்பு

குழந்தைகளை நன்றாக படிக்க வையுங்கள். கல்வியோடு விளையாட்டும் குழந்தைகளுக்கு முக்கியமானதாகும். அதனால் குழந்தைகளை விளையாட்டுகளில் ஈடுபடுத்துங்கள். குழந்தைகளுக்கு நல்லது, கெட்டது சொல்லிக்கொடுத்து வளருங்கள். போதை பொருட்களுக்கு அடிமையாவதால் ஏற்படும் தீமைகள் குறித்து அனைவருக்கும் எடுத்துக்கூறி தூத்துக்குடி மாவட்டத்தை குற்றமில்லா மாவட்டமாக உருவாக்க போலீசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் பாத்திமாநகர் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் மாவட்ட போலீஸ் துறை மூலம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, தூத்துக்குடி ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமானந்த் மற்றும் போலீசார், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story